வங்ஜாகின் வால்டே. குக்கி இனத்தை சார்ந்த கிறிஸ்தவர். 2012ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 3 முறை எம்.எல்.ஏ வாக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு 2017இல் சென்றவர். மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங்கின் ஆலோசகர். இவர் மே 4 2023 அன்று காலை முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். தனது மகன் ஜோசப் வால்டேவை அழைத்து ‘ஒர் அரசாணையுடன் வருகிறேன்’ எனக் கூறி அலைபேசி இணைப்பை துண்டித்து விடுகிறார். தனது வீட்டிற்கு செல்லும் வழியில் வங்ஜாகின் வால்டேவின் கார் ஒரு சிலரால் தடுத்து நிறுத்தப்படுகிறது. எம்.எல்.ஏ வுடன் பயணித்த எலாங்பம் மாபூ எனும் மெய்டெய் இனத்தைச் சார்ந்த பாதுகாப்பு அதிகாரியிடம் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ஓடிவிடு எனக் கூறி விரட்டி விட்டனர். அதே வேளையில் எம்.எல்.ஏ வையும் குக்கி இனத்தைச் சார்ந்த கார் ஓட்டுநர் தாங்ஹெளலால் என்பவரை மட்டும் பிடித்து முதலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகின்றனர். பின்னர், எம்.எல்.ஏ வின் தலையை கூரிய ஆயுதத்தால் தாக்குகின்றனர். கபாலம் பிளந்து இரத்தம் கொட்டுகிறது. எம்.எல்.ஏ வையும் ஓட்டுநரையும் உயிர் போகும்படியாக தாக்கி துன்புறுத்துகின்றனர். பிறகு, மாலையில் எம்.எல்.ஏ.வும் ஒட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். யார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர் என்பது எம்.எல்.ஏ.வின் குடும்பத்திற்கு இப்பொழுது வரை தெரியவில்லை. ஆனால் அன்று இரவே விமானம் மூலமாக எம்.எல்.ஏ தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரது ஒட்டுநர் இரு தினங்களில் உரிய சிகிச்சை பலனின்றி மரணமடைகிறார். எம்.எல்.ஏ வோ ஒரு மாதம் கடந்த பின்னரும் முற்றிலும் பேச முடியாமல், அடுத்தவரின் துணை இல்லாமல் அசையவே முடியாது எனும் நிலைமையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்.
தனது தந்தை வங்ஜாகின் வால்டே மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அவரது மகன் ஜோசப் வால்டே கூறுகையில், “எனது தந்தை கும்பலால் தாக்கப்பட்டிருந்தால் உடலில் பல இடங்களில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கும்; அவரது தலையில் மட்டும் மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறார்கள். எனவே, இது திட்டமிட்ட தாக்குதல் தான்; ஓட்டுநரையும் எனது தந்தையையும் அவர்கள் பல மணிநேரம் துன்புறுத்தி விட்டு இறக்கட்டும் என்று தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.” அந்த அரசாணையில் என்ன இருந்தது என்பது இப்பொழுது வரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அந்த அரசாணைக்கு பிறகு தான், தனது தந்தை பேசவே முடியாத நிலைக்கு சென்று விட்டார் என்று கூறுகிறார் ஜோசப் வால்டே. ஒரு மாதமாக தில்லி மருத்துவமனையில் தனது கட்சியின் எம்.எல்.ஏ உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பொழுது எந்த பாஜக தலைவர்களும் அவரை போய் பார்க்கவில்லை; அவரது தொலைபேசியில் அழைத்து நலமும் விசாரிக்கவில்லை. கிறிஸ்தவத்தை சார்ந்தவர் என்பதாலா? அல்லது பழங்குடியின சிறுபான்மை குக்கி இனத்தை சார்ந்தவர் என்பதாலா? என்று தெரியவில்லை. பாஜகவில் இருக்கும் எம்.எல்.ஏவுக்கே இது தான் கதி என்றால்? சாதாரண மணிப்பூர் மக்களின் நிலை?
ஆதாரம் : தி இந்து நாளிதழ் (ஆங்கிலம்) அ.கோவிந்தராஜன்