தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜகவின் யுவ மோர்ச்சா தேசிய செயலாளர் தஜிந்தர் சபால்சிங் பக்காவை பஞ்சாப் போலீசார் தில்லியில் கைது செய்தனர். ஆனால் தஜிந்தர் சபால்சிங்கை மர்ம நபர்கள் கடத்தியதாக தில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் பஞ்சாப் செல்லும் வழியில் ஹரியானா போலீசாரால் பஞ்சாப் போலீஸ் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவின் யுவ மோர்ச்சா தேசிய செயலாளர் தஜிந்தர் சபால்சிங் பக்கா சமூக வலைதளங்களில் மிக கடுமையான பதிவுகளை வெளியிட்டு வந்தார். தில்லியில் வசித்த தஜிந்தர், கடந்த மார்ச் மாதம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுத்தும் இருந்தார். இதனால் பஞ்சாப் போலீசார், தஜிந்தர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தஜிந்தருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தஜிந்தர் விசாரணைக்கு ஆஜராக மறுத்தார்.
இந்நிலையில், தில்லியில் 50க்கும் மேற்பட்ட பஞ்சாப் போலீஸ் பட்டாளம், தஜிந்தர் சபால்சிங்கை அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. மேலும் அங்கிருந்து பஞ்சாப்பின் மொகாலிக்கு தஜிந்தரை அழைத்துச் சென்றது பஞ்சாப் போலீஸ். தஜிந்தர்சிங்கின் இந்த கைதுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தஜிந்தர்சிங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றதாக அவரது தந்தை தில்லி போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் தஜிந்தர்சிங் கடத்தப்பட்டதாக தில்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.
இந்த புகாரின் அடிப்படையில் ஹரியானா வழியாக தஜிந்தர்சிங்கை அழைத்துச் சென்ற பஞ்சாப் போலீஸ் வாகனத்தை ஹரியானா போலீசார் வழிமறித்தனர். இதனால் மூன்று மாநில போலீசாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பம் தில்லி, பஞ்சாப், ஹரியானாவில் பரப்பரை ஏற்படுத்தி உள்ளது.