states

img

அமெரிக்காவிலும் ஹோட்டல் வாங்கினார் அம்பானி!

புதுதில்லி, ஜன.10- இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, அமெரிக்காவின் பிரபலமான சொகுசு ஹோட்டலை ரூ. 730 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க், சென்ட்ரல் பார்க் பகுதியில், ‘மாண்டரின் ஒரியண்டல் நியூயார்க்’ என்ற பிரமாண்ட நட்சத்திர ஹோட்டல் உள்ளது. 248 அறைகள், நடன விடுதிகள், ‘ஸ்பா’, மதுபான கூடங்கள் உள்பட பல்வேறு வசதிகளுடன் கடந்த 2003-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹோட்டல், அமெரிக்காவின் பிரபல தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு விருப்பமான ஒன்றாகும். இந்த ஹோட்டலைத்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். ‘மாண்டரின் ஒரியண்டல் நியூயார்க்’ ஹோட்டலின் 73.37 சதவிகித பங்குகளை ரூ. 730 கோடிக்கு, அம்பானியின் ‘ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம்’ கைப்பற்றியுள்ளது. சர்வதேச அளவில், ‘போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டல்’, ‘போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஸ்பா’ உள்ளிட்ட பல விருதுகளை இந்த ஹோட்டல் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள பிரபலமான, ‘ஸ்டோக் பார்க்’ என்ற கிளப்பையும், 79 மில்லியன் டாலருக்கு (சுமார் 500 கோடி ரூபாய்)ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியது. பக்கிங்காம்சையரில் 300 ஏக்கர் நிலப்பரப்பின் நடுவே 49 படுக்கையறைகள், தோட்டத்தில் கோல்ப் திடல், 13 டென்னிஸ் ஆடுகளங்கள், 14 ஏக்கரில் அரியவகைத் தாவரங்களுடன் கூடிய பூங்கா ஆகியவற்றை கொண்டது இந்த கிளப்பாகும். அதைத்தொடர்ந்தே தற்போது அமெரிக்காவிலும் நட்சத்திர ஹோட்டல் தொழிலில் கால் பதித்துள்ளது. இவைகள் தவிர, மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சிலும் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டுக் கூடம் அடங்கிய ஹோட்டலை ரிலையன்ஸ் கட்டி வருகிறது.