states

மந்த நிலையை நோக்கி விரையும் உலகப் பொருளாதாரம்...

புதுதில்லி, அக். 28 - உலகப் பொருளாதாரம், ரெசிசன் எனப்படும் மந்த நிலையை வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது. உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தைத் தொடர்ந்து, பணவீக்கம் உலகளாவிய பிரச்சனையாக மாறியிருக்கும் சூழ லில், பணவீக்கத்தைக் குறைக்க  அனைத்து நாட்டு மத்திய வங்கிகளும் வட்டி விகிதங்களை  தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. எனினும், பொரு ளாதாரச் சரிவைத் தடுக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையிலேயே, ராய்ட்டர்ஸ் நடத்திய பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்துக்கணிப்பில் உலகப் பொருளாதாரம் மந்தநிலை யை நோக்கிப் பயணிப்பது தெரிய வந்துள்ளது. இந்த மந்தநிலை பாதிப்பு உலக நாடுகள் இதுவரை பார்த்திடாத வகையில் இருக்கும் என்றும் ஆய்வில் கலந்துகொண்ட பொருளா தார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் முக்கியமான பொருளா தாரங்களைக் கொண்ட நாடுகளுக் கான வளர்ச்சி விகிதத்தையும் அவர்கள் மீண்டும் குறைத்துள்ளனர். உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 2022-ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் பணவீக்கத்தைக் குறைக்கத் தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ஆனால் வர்த்தகச் சூழ்நிலைகள் தொடர்ந்து மோசமாகும் காரணத்தால் பண வீக்கத்தை இன்று வரையில் கட்டுப் படுத்த முடியாமல் தவித்து வரு கின்றன. இந்தப் போராட்டம் 2023-ஆம்  ஆண்டிலும் துவங்கும் என ‘ராய்ட்ட ர்ஸ்’ ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. 

ராய்ட்டர்ஸின் இந்த ஆய்வில் சுமார் 22 உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கலந்து கொண்டுள்ளன. அவற்றில் வெறும் 6 மத்திய வங்கி கள் மட்டுமே அடுத்த ஆண்டின் இறுதி க்குள் தனது நிலையான பணவீக்க இலக்கை அடைவோம் எனத் தெரி வித்துள்ளன. ஆனால், இதுவே ஜூலை யில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 மத்திய வங்கிகள் இலக்கை அடைவோம் எனத் தெரிவித்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  மேலும், செப்டம்பர் 26 முதல்  அக்டோபர் 25 வரை மேற்கொள்ளப் பட்ட ‘ராய்ட்டர்ஸ்’ ஆய்வில் 47 முக்கி யப் பொருளாதார நாடுகளை உள்ள டக்கிய பொருளாதார வல்லுநர்களின் ஆய்வுகள் மற்றும் கணிப்புகள், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி யை கணிசமாக குறைத்து மதிப்பிட்டுள் ளன. முன்பு, 2023 ஆண்டில் உலகளா விய பொருளாதார வளர்ச்சி 2.9 சத விகிதமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அது தற்போது 2.3 சதவிகிதமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. 2024-ஆம் ஆண்டிலும் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.0 சதவிகிதமாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிடைத்துள்ள ஒரே ஆறுதலான விஷயம், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டாலும், அது  வேலை வாய்ப்பில் பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுதான்.

பொதுவாகப் பொருளாதார மந்தநிலை காலகட்டத்தில் அதிகமான அளவில் வேலைவாய்ப்புகள் பறி போகும். உதாரணமாக 2000 டாட் காம் பபுள், 2008 சர்வதேச நிதி நெருக்கடி, 2020 கொரோனா பாதிப்பு ஆகிய கால கட்டங்களில் பொருளாதார வீழ்ச்சி அடைந்ததுடன், மிக அதிகமான வேலையிழப்பும் ஏற்பட்டது. ஆனால் தற்போது வேலைவாய்ப்பின்மை குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ராய்ட்டர்ஸ் ஆய்வில் கலந்துகொண்ட பொரு ளாதார வல்லுநர்களில் 70 சதவிகிதம் பேர்- அதாவது 257 பேரில் 179 பேர்- 2023-ஆம் ஆண்டில் வேலையின்மை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என தெரி வித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மந்தநிலையானது, பொருளாதாரத்தைப் பாதித்தாலும் வேலைவாய்ப்புச் சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.