states

img

ஸ்ரீ மதி நிர்மலா சீதாராமனிடம் சில கேள்விகள் - காஞ்சித் தமிழன்

“நமது மதங்கள் வேறாக  இருந்தாலும் அடிப்படையில் நமது கலாச்சாரம் ஒன்று தான். நதிகளை மதிக்க வேண் டும். சுத்தமாக இருக்க வேண்டும். உணவை அனைவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும்.  வந்த வர்களுக்கு முதலில் தண்ணீர் அருந்த கொடுப் பது, உணவு அளிப்பது,  குழந்தைகளை மதிப்பது ஆகிய உணர்வுகள் நம் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. ஆனால், நம்மைப் பிரிப்பதற்காகக் கூறப்படும் வேறுபாடு கள் இடைக்காலங்களில் கையாளப்பட்ட உத்தியே தவிர அதில் உண்மை இல்லை. இதை இன்று அரசியலில் சிலர் கூறி வருவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்”     -என்று ஒன்றிய நிதி அமைச்சர் ஸ்ரீமதி (திருமதி என்பதைவிட இப்படி சொன்னால் தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்) நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். எங்கே என்றால் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில். 

நமது மதங்கள் வேறாக இருந்தாலும் நமது கலாச்சாரம் ஒன்று தான் என்று ஸ்ரீ வாய் .... சே!  சே!  குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு ஆர்ரமா?  திருவாய் மலர்ந்திருக்கிறார். ‘ ஒரே நாடு ஒரே மதம்’ என்ற ஆணவப் பேச்சைக் கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு இந்தியர்களுக்கு மதங்கள் பல இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.  சைவம்,  வைணவம், சமணம், புத்தம் , சீக்கியம் என்ற மதங்களை எல்லாம் இந்து மதம் என்ற ஒற்றைப் பெயர் சூட்டி அவியலாக்க இப்போது முடியாது;  இன்னும் வெகு காலம் பிடிக்கும் என்பதால்  இப்படிப் பேசி யிருக்கலாம்.  நமது கலாச்சாரமாக அவர் கூறியிருப்பதில் ஒன்று உணவை அனைவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும்.  அருமை.....  அந்த உணவில் வெங்காயம் இருக்கலாமா?  இருக்கக் கூடாதா என்பதைத்  தீர்மானிப்பது நிர்மலா சீதாராம னா? மற்றவர்களா?  என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது.  இருக்கட்டும்....  எல்லோரும் சேர்ந்து  சாப்பிடும் கலாச்சாரத்தை உருவாக்கியது யார்?  இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.  காங்கிரஸ் பேரியக்கத்தில் கலந்திருந்தா லும் மாநாட்டுப்  பந்தலில் தனி ‘ஒதுக்கீடு’ கேட்டது யார் என்ற வரலாறு அவருக்குத் தெரியுமா? சமபந்தி வேண்டும் என்று போராடி, காந்தியை இணங்கவைக்க முடியாமல் போனதாலும்-

சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தாலும் தாம் நடத்திய குருகுலத்தின் போஜன சாலையில் (உணவுக் கூடத்தில் ) ‘சாதீய’ இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதாலும்-  அதில் ஓமந்தூர் ராம சாமி ரெட்டியார் பையனே பாதிக்கப்பட்டதாலும், காங்கிரசையும் காந்தியையும் கைகழுவி விட்டு சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கிய வரலாறு அவருக்குத் தெரியுமா?  தெரிவது கஷ்டம் தான்......  1959 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு ஓரளவு கேள்வி கேட்கும் அறிவும் வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் அறிவும் வர குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஆகியிருக்கும். அதற்குப் பிறகு அவர் சங்கிகளின் கூட்டத்தில் சங்கமம் ஆகி இருப்பார். அவர் இதுபோன்ற வரலாற்றை -  அதிலும் குறிப்பாக சனாதனிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பெரியார் பற்றிய வர லாற்றை - அவர் பார்த்திருப்பாரா? படித்திருப்பா ரா?  என்பது சந்தேகம்தான். அது போகட்டும் ..... நாட்டின் நிதி அமைச்சரிடம் ஒரு எளிய வேண்டு கோள். முப்பத்து முக்கோடி தேவர்களுடன் நேரடி யாக தேவ பாஷையில் பேசி திருமணம் நடத்தி வைக்கிறார்களே, அவர்களைத்  திருமணம் முடிந்தபின் பந்தியில் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு புறப்படச் சொல்லுங்கள். அப் போது நமது கலாச்சாரம் எவ்வளவோ மேன்மை அடையுமே! 

அதற்குள்  கோபிக்காதீர்கள்.....  அடுத்து ஒரு கலாச்சார விசாரணை இருக்கிறது. வீட்டுக்கு வந்தவர்களுக்குத்  தண்ணீர் அருந்த கொடுப் பது நமது கலாச்சாரம் என்று பேசியிருக்கிறீர் கள்.  இது யார் வீட்டுக் கலாச்சாரம்?  தவித்த வாய்க்குத்  தண்ணீரைக் கொடுத்து,  குடித்து முடித்த பின் சொம்பை அப்படியே வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் செல்லும் கலாச்சாரம் நமது கலாச்சாரமா?  தண்ணீரை சொம்பி லேயே கொடுக்காமல் குனிந்து கைகளை ஏந்து ஊற்றுகிறேன் குடி என்றது  நமது கலாச்சாரமா?  தப்பித்தவறி சொம்பில் கொடுத்து விட்டா லும் குடித்தபின் அதனை வேறு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து குளிப்பாட்டி உள்ளே எடுத்துச் சென்றது நமது கலாச்சாரமா?  இதில்  எதனை ‘நமது’ கலாச்சாரம் என்கிறீர்கள்?  இந்த இழிநிலை  ஏதோ கிராமப்புறங்களில் குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஏற்பட்ட  அனுபவம் மட்டும் அல்ல. அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கர் அனு பவித்த அவமானங்களில் ஒன்று என்பதைச் சொல்லக்கூடாதா?  பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்ற சீரழிவு கலாச்சாரத்திற்கு எதிராகத்தானே அம்பேத்கர் மஹத் போராட் டத்தை முன்னெடுத்தார். இன்னமும் சேரியில் வாழும் தலித் குடும்பத்துப் பிள்ளைகள் பள்ளி களில் ஒரே பானையில் தண்ணீர் முகந்து குடிக்க முடிகிறதா?  நமது கலாச்சாரம் என்று பொது மைப்படுத்தி பேசுகின்ற உங்களின் சனாதனக் கூட்டம் இதற்கு எதிராக சுண்டு விரல் நகத்தை யாவது அசைத்ததுண்டா?  இதையெல்லாம் செய்யவில்லை;  செய்யமாட்டீர்கள் என்பது எங்க ளுக்குத் தெரியும். 

ஆனால் தமிழகத்திலிருந்து சில நூறு பேரைக் காசிக்கு கூட்டிக் கொண்டு போய் நமது கலாச்சாரத்தின் பெருமை என்று பொய்யான கருத்துக்களை புகட்டுகிறீர்கள்.  அதுமட்டுமல்ல; நம்மைப் பிரிப்பதற்காகக் கூறப்படும் வேறு பாடுகள் இடைக்காலங்களில் கையாளப்பட்ட உத்தியே தவிர அதில் உண்மை இல்லை என்று பேசுகிறீர்கள். இது வரலாற்று மோசடி அல்லவா?  நம்மைப் பிரிப்பதற்கு என்றால் யாரி டமிருந்து யாரைப்  பிரிப்பதற்கு?  பிரிக்கின்ற உத்தியைக்  கையாண்டது யார்? பிரிவினையை தோற்றுவித்ததும் நிலை நிறுத்தியதும் யார்?  பழக்க தோஷத்தில் பிரிட்டிஷாரும் முஸ்லீம்க ளும் என்பீர்களா? 21 ஆம் நூற்றாண்டிலும் இந்தப்  பாகுபாட்டை நீடிக்கச் செய்வது யார் என்ற உண்மை தெரிந்தும் இதெல்லாம் உண்மை இல்லை என்று நெஞ்சார பொய்தன்னை சொல்கிறீர்கள். 

அத்தோடும் நிறுத்திக் கொள்ளாமல் இதை இன்று அரசியலில் சிலர் கூறி வருவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று தூபம் போடுகிறீர்கள். வரலாற்றின் கடந்த காலத்தை நினைவுபடுத்துவதும், இப்போது ஓரளவு சீரடைந்துள்ள நிலைமைக்கு எத்தனை வீரர்கள் ரத்தம் சொரிந்தனர் என்பதை எடுத்துரைப்ப தும் தவறல்ல. அதுதான் அடுத்த தலை முறையை இழிவுச் சகதிக்குள் மீண்டும் சிக்கா மல் காப்பாற்றும். அது தவறு என்றால் அந்த  தவறை   முற்போக்காளர்களும்,  ஜனநாயகவாதி களும், சுயமரியாதை உள்ளவர்களும், அதனை உருவாக்கப்  பாடுபடுபவர்களும் மீண்டும் மீண்டும்  செய்து கொண்டே தான் இருப்பார்கள்.  அரசியலில் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் யார் என்றால் சனாதன சங்கிகளின் கூட்டமும், அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாக வும் ஜால்ரா அடித்து, தாளம் தட்டி, ஒத்து ஊதுப வர்களும்தான். அதனை தமிழ்ச் சமூகம் மட்டு மல்ல, இந்திய  சமூகமும் ஒன்றுபட்டு செய்யும். எல்லாக்  காலத்தில் எல்லாரையும் ஏமாற்ற முடி யாது ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன் அவர்களே! 

;