states

img

பாஜகவின் பாசிசத்தை திரிபுரா மக்கள் எதிர்த்து முறியடிப்பார்கள்... திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உறுதி....

அகர்தலா:
பாஜகவின் பாசிசத்தை திரிபுரா மக்கள் எதிர்த்து நின்று முறியடித்திடுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் உறுதிபடக் கூறினார்.பாஜகவின் குண்டர்கள் திரிபுரா மாநிலம்முழுவதும் மேற்கொண்டுவரும் தாக்குதல்களைக் கண்டித்தும் அவர்கள் எவ்வாறெல்லாம் சாமானிய மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறார்கள் என்றும் விளக்கி, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று அகர்தலாவில் ஜூன் 27 அன்று நடைபெற்றது. அப்போது மாணிக் சர்க்கார் கூறியதாவது:

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் வேகமாக சீர்கேடு அடைந்து வருகிறது. 2018 மார்ச்சுக்குப் பின்னர் இதுவரையிலும் பாஜக-ஐபிஎப்டிஆட்சியின் கீழ் பத்து பேர் குண்டர் கும்பல்களால்கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்தக் காலத்தில் 5 பேர் காவல்துறை பாதுகாப்பில் இருக்கும்போது இறந்துள்ளனர். இவை அனைத்தின் மீதும் ஆட்சியாளர்களால் எவ்விதமான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரைஎவரும் கைது செய்யப்படவில்லை.இந்த ஆண்டு மார்ச் 3 அன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவுள்ள பாதல் சௌத்ரி தாக்கப்பட்டார். அதேபோன்று சாந்திர்பசாரில் மே 10 அன்று எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல தலைவர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. இதனைக் கண்டித்து ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவரும் அடுத்த நாளிலிருந்து இதுபோன்ற தாக்குதல்கள்இருக்காது என உறுதி அளித்தார். ஆனாலும்எதார்த்தத்தில் அவை பொய்யான உறுதி மொழிகள் என நிரூபணமாகியிருக்கின்றன.

வீடுகள்,கடைகள் சூறையாடல்
கடந்த இரண்டு மாதங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களின் 152 வீடுகள்/கடைகள் தாக்கப்பட்டு, சூறையாடப் ப்பட்டிருக்கின்றன. கட்சி அலுவலகங்கள் 17 தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. 200க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகி,மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களின் மீதான தாக்குதல்கள் குறித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையினர் பாஜக-வின் பொம்மைகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக குண்டர்கள் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் மீது தாக்குதல்கள்தொடுக்கப்படுவது மட்டுமல்ல, தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் மீதே பொய் வழக்கு களையும் புனைந்து வருகிறார்கள்.

உதவி செய்பவர்களை தாக்கும் பாஜக குண்டர்கள் 
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாகவும், சமூக முடக்கத்தின் காரணமாகவும்,நாட்கூலித் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்விதமான நிவாரணமும் அளித்திட அரசாங்கம் முன்வர மறுக்கிறது.ஆயினும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தொண்டர்களும் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றன. இவ்வாறு உதவிசெய்திடும் செந்தொண்டர்கள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள். இடதுசாரி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாம்களைக் கூட பாஜக குண்டர்கள் தாக்கியிருக்கும் கொடூரங்கள் நடந்துள்ளன.இத்தகு பாஜகவின் பாசிச நடவடிக்கை களுக்கு எதிராகத் தற்போது எதிர்ப்பியக்கங்கள் மாநிலம் முழுதும் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில் லோக் ஆயுக்தாவிற்கும், மாநில மனித உரிமைகள் ஆணையருக்கும் அரசாங்கத்தால் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன.

இவை கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன. இதன் தேர்வுக் குழுவில் முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் ஆகியோர் அங்கம் வகிக்கிறோம். இவ்விரு நியமனங்களுக்கும் நான் என்ஆட்சேபணையைத் தெரிவித்திருக்கிறேன். மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக எண்ணற்ற புகார்களைப் பெற்றுள்ள காவல்துறையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியை மனிதஉரிமைகள் ஆணையராக நியமிப்பது சரியல்ல என்றும், அதற்குப் பதிலாக புகழ்பெற்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரினேன். அதேபோன்று லோக் ஆயுக்தாவிற்கும் முன்பு கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன.

இடதுசாரிக் கட்சிகளின் அறைகூவ லுக்கிணங்க, மாநிலத்தில் 200 இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலிப் போராட்டம், பேரணிகள், கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அகர்தலாவில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் நான் பங்கேற்றேன்.மக்களின் மகத்தான ஆதரவுடன் நடைபெற்ற இவ்வியக்கங்களைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் பாஜக குண்டர்கள் பல இடங்களில்தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். ராஜ்நகர், பெலோனியா, தெற்கு திரிபுரா ஆகியஇடங்களில் இவ்வாறு தாக்குதல்கள் தொடுத்துள்ளனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திரிபுரா தலித் ஒருங்கிணைப்புக்குழு செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சுதன் தாஸ் மற்றும் பலர் மீது தாக்குதல்கள் தொடுத்துள்ள னர். காவல்துறையினரின் முன்பாகவே நடைபெற்ற இத்தாக்குதலில் சுதன் தாசுக்கு  தலையில் படுகாயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

காவல்துறையினரின் கையாலாகத்தனத் திற்கு எதிராக அடுத்த நாள் மாநிலத்தில் உள்ள காவல்நிலையங்கள் பலவற்றிற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.அனைத்து விவசாய சங்கங்களின் முன்னணி சார்பில் ஜூன் 26 அன்று ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் விவசாயிகள் பேரணிநடைபெற்றது. இப்பேரணியைக் காவல்துறை யினர், பழைய ஆளுநர் மாளிகை முன்பு தடுத்துநிறுத்தினர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் உரையாற்றினர்.
இவ்வாறு மாணிக் சர்க்கார் கூறினார்.

;