states

அதிமுக பெயரைப் பயன்படுத்த மாட்டோம்: ஓபிஎஸ்

சென்னை,நவ.30- மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை அதிமுகவின் பெயர்,  கொடி, சின்னம் எதையும் பயன்படுத்த  மாட்டோம் என்று ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. அதிமுக பெயர், கட்சிக் கொடி,  இரட்டை இலை சின்னம் ஆகிய வற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை  உயர்நீதிமன்ற தனி நீதிபதி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி உத்தரவிட்டார். தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நீதிபதி கள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு வியாழனன்று (நவ.30) விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இதுவரை இபிஎஸ் தொடர்ந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை அதிமுக வின் பெயர், கொடி, சின்னம் எதையும்  பயன்படுத்த மாட்டோம் என்று ஓபிஎஸ்  தரப்பு உத்தரவாதம் அளித்ததை யடுத்து, வழக்கினை டிச. 11 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு அதிமுக வின் கொடி, சின்னம் என எதையேனும்  பயன்படுத்தினால் தங்கள் கவனத் திற்கு கொண்டு வரும்படி இபிஎஸ்  தரப்பினரிடம் நீதிபதிகள் தெரிவித்த னர்.