states

டீஸ்டா செதல்வாத் கைது மிகப்பெரிய மிரட்டல்

சென்னை, ஜூன் 27-  சமூகப் போராளி டீஸ்டா செதல்வாத் உள்ளிட்டோரை குஜராத் காவல் துறை கைது செய்திருப்பதை கண்டித்தும் அவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கைவிட்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நலக் குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் திட்டமிடப்பட்டு தாக்குதலை நடத்தி பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இரண்டே தினங்களில் படுகொலை செய்யப்பட்டதையும், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழர்கள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் குஜராத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த கலவரம் நடந்த நாட்கள் முழுவதும் குஜராத்தில் ஆட்சி நடத்திய பாரதிய ஜனதா கட்சியும் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடியும் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவும் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, கலவரக்காரர்களின் செயல்களுக்கு உறுதுணையாக இருந்தனர். 

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் வெட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதும், அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த 60-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதையும் நாடறியும். அன்றைக்கு ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக அரசும், மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசும்  கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கோ, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட முன்வரவில்லை. தேசம் சந்தித்த மிகப்பெரிய மதவெறி தாக்குதல் இது என்று பல்வேறு அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள் தேசத்திலும் வெளிநாட்டிலிருந்தும் கண்டன குரல்கள் எழுப்பினர். இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்டவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர், படுகொலைகள் செய்யப்பட்டனர், மிரட்டப்பட்டனர், பல நீதிபதிகளே வாய்மூடி மௌனியாக இருந்தனர்.  ஆனால், குஜராத்தில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாக, சட்டத்தின் உதவியை பெற்றுத்தர சமரசம் இல்லாமல் போராடிய களப்போராளி டீஸ்டா செதல்வாத், காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்  உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்துத்துவா ஆட்சியாளர்களின் குஜராத் அரசும் சட்டத்துறையும்,  

நீதிமன்றமும் நியாயத்தின் பக்கம் நிற்பவர்களை மிரட்டி பார்க்கிறது.  இது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த மாண்புகளை பாதுகாக்க முன் வருபவர்களுக்கு விடப்படும் மிகப்பெரிய எச்சரிக்கையாகும். இந்திய தேசம் பலதரப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு உறுதியளிக்கிற அரசியலமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டத்தின் மாண்புகளை உயர்த்தி பிடிக்க வேண்டியது தேச பக்தர்களின் கடமையாகும்.  எனவே, இந்த எல்லாவற்றையும் கேள்வி எழுப்புகிற பாஜக ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு எதிராக குரல் கொடுக்க அனைத்துப் பகுதி மக்களும் முன்வர வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறைகூவி அழைக்கிறது.  குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதன் மூலம் மட்டும்தான் இந்த தேசத்தில் இந்துத்துவா ஆட்சியாளர்களால் திட்டமிடப்படும் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்த நீதியை நிலைநிறுத்த தொடர்ந்து போராடிய, போராடிவரும் களப்போராளி டீஸ்டா செதல்வாத் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;