states

இடிக்கும் புல்டோசர்கள்: கண்ணீர் சிந்தும் ஏழைகள்! - சி.ஸ்ரீராமுலு

தமிழ்நாட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகளின் மனித நாகரிக புல்டோசர்கள், கல்லூரி தந்தைகள், கொடை வள்ளல்கள், அரசியல் தாதாக்கள் எல்லாம் தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் என்று மாவட்டம் தோறும் 100 ஏக்கர், 200 ஏக்கர், 300 ஏக்கர் என்று அரசு நிலத்தை வளைத்து, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து எழுப்பியுள்ள வானுயர கட்டடங்கள், வணிக வளாகங்கள் ஓரம் கூட ஒதுங்க மறுக்கிறது. அதே நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே  ஸ்ரீரங்க கவுண்டன் புதூர் கிராமத் தில்  காவல்துறையின் துணையுடன் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது. அப்போது 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் ஒரு வீட்டிற்குள், கட்டிலில் படுத்த படுக்கையாக இருந்த 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு ஈவு, இரக்கமில்லாமல் வீட்டை இடித்து தள்ளிய அந்தக் காட்சியால் பார்ப்பவர்கள் கண்கள் குளமாகின.

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் பின்னணியில் மாநில அரசின் அதிகாரிகள் ஏரி, குளங்கள், நீர்வழிகளின் அருகில் குடியிருக்கும் வீடுகளை இடிக்கும் ‘புல்டோசர்’ பயணத்தை சென்னையில் தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தரும புரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களுக்குள் புகுந்து ஏழை-எளிய தினக்கூலி, உழைப்பாளி மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குவதும் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் கைவிடுவதும் பெரும் கொடுமையாகும்.

இது மட்டும்தானா?

கையளவும் கூட நிலம் இல்லாமல் வயல் வெளி களில் பாம்பு, எலி பிடித்தல், விறகு சேகரித்தல், வீட்டு  வேலைகள் செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தி வரும் இருளர்கள். பாய், கூடை கள் முடையும் குறவர், குறவன், நரிக்குறவர், வேட்டைக் காரர்கள், தங்களது வயிற்றுப் பசியைப் போக்கும் திருவிழாக்கள், சந்தைகள், மக்கள் கூடும் இடங்களே வருமானக் களம் என்பதால் அதை நோக்கி ஊர் ஊராகச் சுற்றி ஊசிமணி-‌பாசிமணி விற்கும் குருவிக் காரர்கள், குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர்கள், வித்தை காட்டும் பூம்பூம் மாட்டுக்காரர்கள், மணியாட்டிக் காரர்கள், பாம்பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள் சமூக மக்கள்,‌ இன்றும் தமிழ் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை ஆதரிப்பார் யாரும் இல்லாமல் போனதன் விளைவு பேருந்து நிலையம், சாலை ஓரம், ஊருக்கு ஒதுக்குப் புறமான குளம், ஏரிக் கரையோ ரங்கள், நீரோட்டப் பாதைகள், ஆற்றோரங்களிலும் தற்காலிகமாக ‘ஒண்டிக் குடிசைகள்’ அமைத்து வாழ்க்கையோடு போராடுகிறார்கள்.

காடு,மலைகளில் ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் பூர்வகுடி மக்களின் சிலர் சமவெளிப் பகுதிகளுக்கு வந்தாலும் வசிப்பதற்கு ஒரு சென்ட் நிலம் கூட சொந்தமில்லை. அவர்களைப் போன்று பட்டி யல் இனம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை-எளிய மக்கள் பலரும் தாங்கள் சிறுகக், சிறுக சேமித்த பணத்தில் பல லட்சம் செலவழித்து நீர்நிலைகளின் ஒதுக்குப்புறங்களில் குடிசைகள், வீடுகள் கட்டிக் கொண்டும் சிறிதளவு நிலத்தை உழுது விவசாயம் செய்து ஜீவனம் செய்து வரு கிறார்கள். அந்த வீடுகளையும் ஆக்கிரமிப்பு என புல்டோசர்களால் இடித்து நடுத்தெருவில் நிறுத்தும் அவலம் தொடர்கிறது. இது மட்டுமின்றி,”எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்” என்கிற வகையில் விவசாய சாகுபடிகளை அழித்தொழித்து நிலத்தையும் பறிக்கின்றனர் மனிதாபிமானமற்ற அதிகாரிகள்.

அதே நேரத்தில், யானைகள் வழித்தடங்களை மறித்து நிற்கும் ஆடம்பர விடுதிகளுக்கு சீல் வைத்து இடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விடுகிறது. இந்த உத்தரவுகள் எதுவும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்பதை நிரூபித்து வரும் வெள்ளி யங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈசா யோகா  மையம், வனவிலங்குகள் அதிகமாக வசிக்கும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகளின் வழித்தடம், வாழ்விடம் ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறம்பாக ஏராளமான கட்டடங்கள், சுற்றுச்சுவர், இரும்பு மின் வேலி அமைத்தது போதாது என்று பழங்குடி ஆதிவாசி மக்களை மிரட்டி நிலத்தையும் பிடுங்கியது. ஈஷா ஜக்கி வாசுதேவ் போன்ற இத்தகைய ஆன்மீக குருக்க ளுக்கும், சக்தி பீடங்களுக்கும் வளைந்து கொடுக் கின்றன ஒன்றிய-மாநில அரசுகள்! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே செவலபுரை கிராம குளக்கரை புறம்போக்கு நிலத்தில் அரசுப் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், ரேசன் கடை என பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலை யில், ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத பல சமூ கத்தைச் சேர்ந்த ஏழை மக்கள் வீடுகள் கட்டி பல்லாண்டு வாழ்ந்து வருவது நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் வழங்கியதுடன் வீடுகளையும் இடிப்ப தற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை யுடன் படையெடுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியின் அரசு புறம்போக்கு நிலத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆதரவற்ற குடும்பத் தின் ஓலைக் குடிசையையும் அகற்றுவதற்கு வட்டாட்சி யர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக் கையை மேற்கொண்டனர்.  இந்தச் சம்பவங்களை கேள்விப்பட்டதும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று அதிகாரிகளின் முயற்சிக்கு தடை போட்டனர். 

தனியார் மட்டுமல்ல!

தமிழகத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டம் ஒன்று பட்ட காஞ்சிபுரம் என்பது அனைவரும் அறிந்தது. சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 950 ஏரிகள் உள்ளன. இவற்றில் மேல் மருவத்தூர், அச்சரப்பாக்கம், ஜமீன் எண்டத் தூர், பள்ளிப்பட்டு என ஏராளமான ஏரிகளுள் 22 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதிலும் மதுராந்தகம் ஏரியை தெரியாதவர்களே இருக்க முடியாது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோரும் தென் மாவட்டங்களி லிருந்து சென்னைக்கு வருவோரும் புறவழிச் சாலையை கடக்கும் பொழுது கடல் போல் காட்சி அளிக்கும் அந்த ஏரி.

இந்த ஏரியில் கரையோரம் நகருக்கு ஒதுக்குப்புற மாக பல்லாண்டு காலம் குடிசை அமைத்தும் வீடுகள்  கட்டியும் வாழ்ந்து கொண்டு வரும் திருவிக நகர் மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்ற முயற்சிகள் தீவிரமாகி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும்ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுத் தான் அரசு கட்ட டங்கள் கட்டப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும் நீர்நிலை தூர்க்கப்பட்டுத்தான்  கட்டப்பட்டுள்ளது.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் ஏரியின் நிலத்தில்தான் கட்டப்பட்டுள் ளது. விழுப்புரம், சேலம் என பல்வேறு பேருந்து நிலை யங்களும் நீர் நிலையில்தான் கட்டப்பட்டுள்ளன. திண்டிவனம் உள்ளிட்ட ஏராளமான நீதிமன்றங்க ளும் அரசு புறம்போக்கு மற்றும் நீர் நிலையில்தான் உள்ளனர். இவ்வளவு ஏன்? மதுரையின் மிகப்பெரிய ஏரியான உலகனேரி தூர்க்கப்பட்டுதான் உயர் நீதிமன்றத் தின் மதுரை கிளை கட்டடங்களும் எழுந்துள்ளன. திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் அலு வலகங்கள், பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங் கள், துணை சுகாதார நிலையங்கள், பிற துறைகளின் அரசு கட்டடங்கள், பள்ளி-கல்லூரிகள், காவல் நிலை யங்கள் என பலதும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தான் கட்டப்பட்டுள்ளது.

ஆசியாவில் மிகப்பெரி‌ய மைதானங்களில் ஒன்றான சென்னை நேரு விளையாட்டு மைதானம், கோயம்பேடு வணிக வளாகம், முகப்பேர் வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு, சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை, வேளச் சேரி ரயில் நிலையம் என நூற்றுக்கணக்கானவை. இன்றைய நீர் நிலைகள் தூர்க்கப்பட்டு கட்டடங்களாகவும் எழும்பி நிற்கின்றன. இப்படியான சம்பவங்கள், புல்டோசர்களைக் கொண்டு வீடுகளையும் குடிசைகளையும் இடித்துத் தள்ளி நீர் நிலைகளைப் பாதுகாக்கும்  சில அதிகாரி களின்  கடமைக்கும் நேர்மைக்கும் இந்த நிகழ்வுகள் சாட்சி யம் அளிக்கின்றன.  எனவே, தீர்ப்புகளை எழுதும் நீதிமான்கள் தற்போ தைய சூழலை கருத்தில் கொண்டும் ஆவணங்களில் நீர்நிலை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் உண்மை யில் மக்கள் வாழும் இடங்களில் நீர்நிலை மற்றும் நீர் சேமிப்பு நடைமுறையில் இல்லை என்பதை உணர்ந்து அரசும் அதிகாரிகளும் சிறப்பு திட்டத்தை கொண்டு அனை வருக்கும் சொந்த வீடு கட்டிக் கொடுக்க வழி வகை செய்து ஏழைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும்.
 


 

;