states

ஹிந்துஸ்தான் துத்தநாக நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளும் தனியார்மயம்!

புதுதில்லி, மே 26 - ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறு வனத்தில் (Hindustan Zinc Ltd - HZL)  எஞ்சியுள்ள 29.5 சதவிகிதப் பங்குகளை யும் தனியாருக்கு விற்பனை செய்வ தென நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக் கான ஒன்றிய அமைச்சரவைக் குழு (CCEA) பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் புதன்கிழமையன்று கூடியது.  ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, நிதி மற்றும்  கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திலேயே ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில், அரசிடம் மிச்சமிருக்கும் 29.5 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2022-23 நிதியாண்டில் மட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு விற்பனை செய்யும் வகையில்  ரூ. 65 ஆயிரம் கோடி நிதி திரட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு இலக்கு வைத்துள்ளது. இதில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் பங்குகளை விற்று நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ. 23 ஆயிரத்து 575 கோடியை திரட்டி விட்டது. இந்நிலையில்தான், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 29.5 சதவிகித பங்குகளையும் விற்கும் பட்சத்தில், ரூ. 38 ஆயிரத்து 062 கோடி கிடைக்கும் என்றும், இதன்மூலம் நடப்பு நிதியாண்டிற்கான தனியார்மய இலக்கு ரூ. 65 ஆயிரம் கோடியை எட்டி விடலாம் என்றும் மோடி அரசு களத்தில் இறங்கியுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 100 சதவிகிதப் பங்குகளும் ஒன்றிய அரசு  வசமே இருந்தது. 2002-ஆம் ஆண்டில் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு முதன்முறையாக 26 சத விகித பங்குகளை, அனில் அகர்வா லுக்குச் சொந்தமான ‘வேதாந்தா’ குழு மத்தின் ‘ஸ்டெர்லைட் ஆப்பா்சூ னிட்டிஸ், வென்ட்சா்ஸ் நிறுவனத்துக்கு (எஸ்ஓவிஎல்) ரூ. 445 கோடிக்கு விற்றது.  அதன் பின்னா் 2003-ஆம் ஆண்டில் சந்தையிலிருந்து 20 சதவிகிதப் பங்கு களையும், ஒன்றிய அரசிடமிருந்து நேரடி யாகவே 18.92 பங்குகளையும் வேதாந்தா குழுமம் கைப்பற்றியது. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக, பொதுத்துறையான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 64.92 சதவிகித பங்குகளை வேதாந்தா குழுமம் வளைத்துப் போட்டது.

இந்நிலையில்தான், வாஜ்பாய் அரசு ஆரம்பித்து வைத்த ஹிந்துஸ்தான் ஜிங்க் தனியார்மய நடவடிக்கையை, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அரசு ஒரேயடியாக நடத்தி முடிக்க தீர் மானித்து, எஞ்சியிருக்கும் 29.5  சதவிகிதப் பங்குகளையும் கைகழுவி விடுவதற்கு தற்போது அமைச்சர வையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்த பங்குகளை அரசு மொத்தமாக விற்பனை செய்ய உள்ளதா  அல்லது சந்தை நிலவரத்தை ஒட்டி,  பகுதி பகுதியாக விற்பனை செய்ய உள்ளதா? என்பது இன்னும் தெரிய வில்லை. பெரும்பாலும், ஆஃபர் பார் சேல் (OFS) என்ற சலுகை அடிப்படையிலேயே பங்குகள் விற்பனை இருக்கும் என்று உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, ஏற்கெனவே 64.92 சதவிகிதப் பங்குகள் மூலம் நிர்வாகம்  தங்கள்வசம் வந்துவிட்ட நிலையில், மேற்கொண்டு 5 சதவிகிதப் பங்கு களுக்கு மேல் வாங்க முடியாது என்று வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் சலித்துக் கொண்டுள்ளார். அவருடைய தற்போதைய குறி, பாரத்  பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட்  (BPCL) என்பதையும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

“பிபிசிஎல் போன்ற நிறுவனங்களை தனியார்மயமாக்குவது அரசுக்கு அதிக மதிப்பையும் வருவாயையும் உரு வாக்கும். பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும்  பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை தனியார் மயமாக்குவதன் மூலம் இங்கிலாந்தில் நடந்த தனியார்மயமாக்கலைப் பார்க்க வேண்டும். அதே வழியில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் சுமார் 20 சதவிகிதத்தை தனி யாருக்கு அரசு கொடுக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பை 5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.  3.5 சதவிகித பங்குகளை தனியார்மயம் ஆக்கியதற்கே எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 77 ஆயிரம் கோடி அளவிற்கு குறைந்துபோனது இங்கு குறிப்பிடத்தக்கது.

;