states

பல்வகை புறம்போக்குகளில் வசிக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் சுமார் 25 லட்சம் குடும்பங்கள் பல்வேறு வகை யான புறம்போக்குகளில் வாழ்ந்து வரு கின்றனர். இக்குடும்பங்களுக்கு குடி மனைப்பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல் வேறு போராட்டங்களை நடத்தியுள் ளது. தமிழ்நாடு அரசு இலவச மனைப் பட்டா ஆண்டு தோறும் வழங்கி வந்தா லும் நிரந்தரமான தீர்வு ஏற்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம், நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத் தையும் குறிப்பிட்ட காலவரையறைக் குள் அகற்ற வேண்டுமென்று உத்தர விட்டுள்ளது. இல்லையென்றால் தலை மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரி களை நேரில் அழைப்போம் என்று அச்சு றுத்தியுள்ளது. மேலும், இத்தகைய ஆக் கிரமிப்புகளை முறைப்படுத்தக் கூடாது என்றும் அரசுக்கு கட்டளையிட்டுள்ளது. நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும். ஆனால், அரசே தன்னுடைய பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான ஏரி களை வகை மாற்றம் செய்து பயன் படுத்திக் கொண்டுள்ளது. பல்வேறு ஏரி களை வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பொதுமக்களுக்கு அரசு விற்பனை செய் துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகி றோம். கிராமங்களில் விவசாயம் பாதிக் கப்பட்டு பிழைப்புத் தேடி நகரங்களில் குடியேறிய மக்கள் பயன்பாடற்ற நீர் நிலைகளை ஆக்கிரமித்து சிறு குடிசை களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இதில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு விற் பனை செய்தது, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி கள் மட்டத்தில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியது போன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பல் லாண்டு காலமாக இவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு திடீரென்று பல லட்சக்கணக்கான குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளி யேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறு வது ஏற்கத்தக்கதல்ல என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

மக்கள் கடன்பட்டு, வீடுகட்டி பல பத்தாண்டுகளாக வாழ்ந்து வரு கிறார்கள். அக்குடியிருப்புகளுக்கு எல்லா விதமான அடிப்படை கட்டமைப்பு வசதி களையும் அரசு ஏற்படுத்தி கொடுத்துள் ளது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தர வினால் மக்கள் வீட்டை இழந்து நடுத்  தெருவில் நிறுத்தப்படுவர். அப்படியே அத்தகைய இடங்களை மீட்டாலும் மீண்டும் நீர்நிலைகளாக மாற்ற முடி யாது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள தவறிவிட்டது. பல லட்சக்க ணக்கானோரை பாதிக்கும் வகை யிலான நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாப்பதற்கு பதிலாக வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றுவதை இம்மாநாடு கண்டிக்கிறது. இதில் பெரும்பகுதியானவர்கள் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் என் பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அன்னிய, இந்திய பெருநிறுவனங்க ளுக்கு இந்திய பொதுச் சொத்துக் களை / கனிம வளங்களை / பொதுத் துறை பங்குகளை அரசுகள் அடிமாட்டு விலைக்கு விற்பதை எதிர்த்து நீதி மன்றம் சென்றால் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்கி றது நீதிமன்றங்கள். ஆனால் அதே நீதிமன்றங்கள் அரசு கொள்கை முடி வெடுத்து வகை மாற்றம் செய்கிறோம் என்றால் அதை தடுக்கும் விதமாக ஆணையிடுகிறது.

விடுதலையடைந்து 75 ஆண்டு களுக்கு பின்பும் தனது மண் என்று சொல்லிக் கொள்ள ஒரு அடி நிலம் கூட இல்லாத ஏழைகளிடம் இருந்து பறிப்ப தையே தலையாய நீதி என்பதுபோல் நீதிமன்றங்களே ஆணையிடுவது சரி யானது அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்கவும், மேல்முறையீடு செய்து மக்களின் வாழ்வுரிமையை பாதிக்காத வகையில் தேவையான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டு மென்று இம்மாநாடு கோருகிறது. பயன்பாடற்ற, நீண்டகாலமாக மக்கள் வசிக்கும் நீர்நிலை புறம்போக்குகளை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். தற்போதும் உண்மையில் நீர்நிலைகளாக உள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து அவர்கள் அங்கே வீடுகட்டி குடியேறும் வரை, இருக்கும் இடத்திலி ருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்றும், ஏழை நடுத்தர மக்கள் அரசால் கொடுக் கப்படும் மாற்று இடத்தில் வீடுகட்ட நிதி உதவி அளிக்க வேண்டுமென்றும்  தமிழ் நாடு அரசை இம்மாநாடு கோருகிறது. சொந்தமாக குடிமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் குடி மனைப் பட்டா வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்து செயல்படுத்திட வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றல் என்ற பெயரில் மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றுவதை எதிர்த்து தங்களின் வாழ்வுரிமையை காக்க வலுமிக்கப் போராட்டங்களை நடத்திட பொது மக்க ளையும், கட்சி அணிகளையும் இம் மாநாடு அறைகூவி அழைக்கிறது.

முன்மொழிந்தவர் : ஏ.லாசர்
வழிமொழிந்தவர் : ஆர்.வேல்முருகன்