states

குமரியில் உள்வாங்கியது கடல்நீர்: படகு போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி,ஜூன் 30- கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் ‘திடீர்’என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் வியாழனன்று(ஜூன் 30) காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பின்னர் 10 மணிக்கு மேல் படகு போக்குவரத்து துவங்கியது. தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மீனவர்கள் வரும் மூன்று நாட்களுக்கு லட்சதீவு மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்வதோடு கடல் சீற்றமாகவே காணப்படுவதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில்  தங்கள் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

;