புதுதில்லி, ஜூலை 13- கூடங்குளம் அணுக்கழிவுகளை சேகரித்து வைப்பதற்கான தொலைத்தூர அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்பு 2026-ஆம் ஆண்டு வரை தேவைப்படாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அனல்மின்நிலையம் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக சேகரித்து வைப்பதற்காக தொலைதூர கட்டமைப்பை உருவாக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பதில் மணு தாக்கல் செய்த இந்திய அணுசக்தி கழகம் அணு உலை 1, மற்றும் 2ல் தற்போது உள்ள எரி பொருளை முறையே 2026, மற்றும் 2028-ம் ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. அதுவரை தொலைதூர அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்பு தேவைப்படாது என கூறி உள்ள அணுசக்தி கழகம் 2026-ஆம் ஆண்டு வரை அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. பூமிக்கு அடியில் மிகவும் ஆழத்தில் அணுக்கழிவுகளை வைக்கும் கட்ட மைப்பை உருவாக்க வல்லுநர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதனை அமைக்க முயற்சியே மேற்கொள்ள வில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும் இந்திய அணுசக்தி கழகம் பதிலளித்துள்ளது.