states

ஊடகம் துறந்து காடகம் செல் - - நவகவி

ஊடக சுதந்திரம் உருக்குலைந்து போனதாய் ஒப்பாரி வைக்கலாமா? ஊறுகாய் போடும்  உயர் தொழில் நுட்பத்தை ஊடகம் இப்போதும் ஒளிபரப்புகிறதே!  பத்திரிகை செயல்படும் சுதந்திரம் பறிக்கப்பட வில்லையே! சுய தணிக்கை செய்து கொண்டு சுதந்திரமாய் பத்திரிகை வெளியிடலாமே!  ஆனால் நீங்கள் கல்யாணப் பத்திரிகை வெளியிட நாங்கள் கட்டுப்பாடு விதிப்பதில்லை என்பதை கவனப்படுத்துகிறோம்!  கல்யாணப் பத்திரிகைகளை காவி நிறத்தில் அச்சடித்தால் திருமண அழைப்பிதழ்களுக்கு ஜிஎஸ்டி போட மாட்டோம் ....அந்த சலுகை உமக்கு சத்தியமாய் தருவோம்!

எழுத்தாளன் என்ற பெயரில் பேனாக்காரன் எல்லாம் சீனாக்காரனாய் தென்படுகிறான்!  குறிப்பாக சீனத் தயாரிப்பு என்பதால் ஹீரோ பேனாக்காரனைக் கூட ஐயத்துடன் நாங்கள்  அணுக வேண்டியுள்ளது!  இந்தியா அநியாயமாய் இடது பக்கம் சாயாதிருக்க ஏற்பாடு செய்துள்ளோம் ...அதன்படி இடது கையால் பேனா பிடித்து எழுதும் பழக்கம்  இழிவான பழக்கம் என்பதையும் ஆய்வு மூலம் அறிந்துள்ளோம்!  அந்தப் பழக்கம் அதி தீவிர இடதுசாரி செயல்பாட்டின் அடையாளம் என்பதால் அந்த கெட்ட பழக்கத்தை  விட்டொழிக்க வைப்போம்!  சாரை சாரையாய் சனங்கள் இடதுசாரிகள் ஆகி ஊர்வலம் போவது ஏற்புடையதல்ல! எனினும் எறும்புகள் சாரை சாரையாய் ஊர்வலம் போக சட்டப்படி அனுமதி உண்டு!  இடதுசாரிகளே! “இடதன்”களே! இடது சார்பான எதற்கும் இங்கே அனுமதி கிடையாது!  சாணத்தில் சர்வ ரோகநிவாரணியை சரியாய் கண்டுபிடித்த நாங்கள் இடது சிந்தனை மக்களுக்கு ஏன் வருகிறது என்பதையும் கனகச்சிதமாய் கண்டுபிடித்துள்ளோம்!  இடது மூக்குத் துளை வழியாய்  மூச்சு விடுவதாலேயே மக்கள் மூர்க்கர்களாய் இடதுசாரிகளாய் ஆகிறார்கள்.... ஆகவே...

முன்னேற்பாடாய்  முதலில் “இடதன்”களுக்கு மூக்கின் இடது துளையை மூடப் போகிறோம்!..பிறகு விவேகமான இந்தத் திட்டத்தை விரிவாய் பொதுஜனத்துக்கும் விஸ்தரிக்கப் போகிறோம்!  மேக் இன் இந்தியா திட்டப்படி மூக்கடைப்பு எந்திரங்களை உள்நாட்டிலேயே நாங்கள் உற்பத்தி செய்யப் போகிறோம்!  மூச்சு சுதந்திரம்  போச்சு என புலம்புவோரே! வலது மூக்குத் துளைவழியாகவும் வாய் வழியாகவும் மூச்சுவிட வழங்கி இருக்கிறோம் சுதந்திரம்!  வலது சிந்தனையை வளப்படுத்த வாய் வழியும் தவிர்த்து வாழ்நாள் எல்லாம் வலது மூக்குத் துளை வழியாய் மட்டுமே மூச்சுவிடும் யோகா பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கப் போகிறோம்!  இடதை இழிவுபடுத்த வேண்டுமாதலால் இடது காதுகள் மூளிக் காதாகவே இருக்குமாறும், வலது காதில் மட்டுமே ஜிமிக்கி அணியும்படியும், தாய்மார்களுக்கு  தக்க வாய்ப்புச் சலுகை வழங்கி மகளிர் மசோதாவில் புதிய சரத்து புகுத்தப்படும்.

2034ல் அல்ல; இப்பொழுதே இந்த மகளிர் மசோதா சரத்து மட்டும் இனிதே அமல்படுத்தப்படும்!  “இடது காது ஜிமிக்கியை என்ன செய்வது?”என எதிர்க்கட்சிகள் வினா தொடுத்தால் அதையும் வலது காதுக்கே போட்டு இரண்டு ஜிமிக்கிகள் தொங்கும் அழகை வலது காதுக்கு வழங்குவோம்! வலதை வளப்படுத்துவோம்!  “சீனா கொரோனாவை சிறப்பாய் கட்டுப்படுத்தியது” என உண்மைக்குப் புறம்பாய் உங்கள் ஊடகம் உரைக்கலாமா?  கங்கையில் மிதந்த கொரோனா பிணங்கள் இந்தியப் பிணங்கள் என ஏகடியம் பேசலாமா?  சீன யாங்சி நதியில் மிதந்த “சீன கொரோனா” பிணங்கள்தான் அந்த நதி வெள்ளத்தின் மிகை விசையால் நாடு தாண்டி வீசப்பட்டு கங்கையில் விழுந்து மிதந்தன என கரெக்டாய் சொல்ல வேண்டும் அல்லவா?  “சாப்பிட அல்ல சாப்பாட்டுத் தட்டுகள்! சத்தம் எழுப்பி கொரோனா விரட்டவே”- எனும் உன்னதக் கண்டுபிடிப்பை  உலகிற்கு வழங்கினோம்! அந்தச் சத்தம் அமுங்கி அடங்குமாறு உங்கள் ஊடகச் சத்தம் ஊளையிடலாமா?  சீனக் காசை பி.எம்.கேர்ஸ் பெற்றால் கம கம வாசம் அடிக்கும்! சீனக் காசை உங்கள் ஊடகம் பெற்றால் கம்யூனிச நாற்றம் அடிக்கும்!  இரண்டகமான இந்த இரட்டை  நிலைப்பாட்டுக்கு நாங்களா காரணம்? இல்லவே இல்லை! நவ சீனம் என நீங்கள் பிதற்றும் சீன காசுக்குள்ளேயே இந்த ஈன குணம் இரட்டை குணம் உள்ளதே!

“பட்டினி இல்லாத சீனா”என பச்சைப்பொய் சொல்லலாமா? “சட்டினி இல்லாத இட்டிலி போன்றது சமத்துவம் இல்லாத சீனா!”என கட்டுரை நீங்கள் எழுதாதது கண்டிப்பாய் தேசத் துரோகம் அல்லவா?  நீசக் கரம் சீனக் கரம்! நியூயார்க் டைம்ஸ் நீட்டும் கரமே நேசக்கரம்!....அந்தக் கரத்தின் ஐந்து விரல்களுமே “ஆள்காட்டி” விரல்களாய் எமக்காக அவதரித்துள்ளன அன்றோ?  அது மட்டுமா? வாஷிங்டன் போஸ்ட்டின் மோதிர விரலாலும் எமக்கு “மதவெறியர்”என குட்டு வாங்கும் பாக்கியம் குறைவின்றி கொடுக்கப்பட்டுள்ளது என உரிமையுடன் உவகையுடன் உரைக்கிறோம்!  விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு வெகுமதியாய் தரப்பட்ட பத்திரிகை “தர்மமே”  எங்கள் விஷ்வ குரு வழியாய் இந்தியாவுக்கும் விஸ்தரிக்கப்படுகிறது!

நியூயார்க் டைம்ஸ் மட்டுமா? நியூயார்க் சுதந்திரச் சிலையும் அமெரிக்காவின் “தர்மத்தை” அகிலம் எங்கும் விஸ்தரிக்கிறது!  “சுதந்திரச் சிலையின் சுடர் விடுதலைக்கான வெளிச்சம் அல்ல! அப்பாவி விட்டில்கள் ஆசையாய் வந்து விழுவதற்கான வெளிச்சம்!” என குதர்க்கம் பேசுவோர் பேசட்டும்! யாங்கி மாமாவின் திருவடி நிழலே எம் சொர்க்கம்!  அகலமாய் போடப்பட்ட தில்லியின்  ஆறு வழிச்சாலையில் அரியானா பஞ்சாப்புடன் சேர்ந்து அகில இந்தியாவின் விவசாயிகள் கபடி ஆடி களிப்படையவே கட்டுச் சோறு கட்டிக்கொண்டு தில்லி நோக்கி திரண்டு வந்தார்கள்!  ஓராண்டாய் அவர்கள்  உரத்து முழங்கியது சடுகுடு சத்தம் தான்!...அதை ஆர்ப்பாட்டப் போராட்டச் சத்தம் என தவறான தகவல் தந்தமைக்கு...இந்த தேசத்துரோக ஊடக அதர்மத்திற்கு, சினத்தோடு அல்ல.... உங்களை கனிவோடு தான்  கைது செய்திருக்கிறோம்!

பொதுத்துறையை உயிரோடு  பொலி போட்டு உண்ணும் சைவச் சாப்பாட்டு  சாந்த சொரூபன் அதானியை சங்கடப் படுத்தலாமா?  அன்னாடம் காய்ச்சி அம்பானியை-அந்த இருபத்தேழு மாடி ஏழையை-அந்த இந்தியாவில் அவதரித்த இயேசுவை “பெட்ரோல் விழுங்கி !” என ஈன வார்த்தையில் ஏசலாமா?  ஒன்றை மட்டும் இப்போது உரக்கச் சொல்கிறோம்! ஊடகம் யாவும் நாக்பூரின் வீடகம் ஆக விரும்புகிறவரே பேனா பிடிக்கலாம்!  அப்படி விரும்பாத அனைவரும் ஊடகம் துறந்து காடகம் ஏகி ஓணான் பிடிக்கலாம்!