states

img

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகள் விற்பனையால் அரசுக்குக் கிடைத்த வருவாய் எவ்வளவு? -பி.ஆர். நடராஜன் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி-யின்) பங்குகளை (ஐபிஓ திட்டத்தின்மூலம்) விற்றதிலிருந்து அரசுக்கு, 29516.12 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை (ஐபிஓ திட்டத்தின்மூலம்) விற்றதிலிருந்து அரசுக்கு, எவ்வளவு வருவாய் கிடைத்தது என்றும், மேலும் ஐடிபிஐ (IDBI)வங்கியை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கையகப்படுத்தியதன் மூலம் எதிர்பார்க்கப்படும் பிரச்சனைகள், குறிப்பாக முகவர்களின் ஊதியம் மற்றும் கமிஷன் மீதும் அதன் கிராமப்புற மற்றும் சமூகத் துறைகளின் கடமைகள் என்ன என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய அரசின் நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் கராட் பதிலளிக்கையில் கூறியதாவது:

“ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை (ஐபிஓ திட்டத்தின்மூலம்) விற்றதன் மூலம் இந்திய அரசு தோராயமாக ரூ.29516.12 கோடி ஈட்டியுள்ளது என்றும், 2019 ஜனவரியில் ஐடிபிஐ (IDBI) வங்கியின் 51 விழுக்காடு பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கையகப்படுத்தியுள்ளது. ஐடிபிஐ வங்கியில் முதலீடு செய்வதால் முகவர்களின் கமிஷன் மற்றும் ஊதியத்தின் மீதோ, கிராமப்புற மற்றும் சமூகத் துறைகளுக்கான அதன் கடமைகள் மீதோ எந்த விளைவுகளும் இல்லையென ஆயுள் காப்பீட்டுக்கழகம் தெரிவித்துள்ளது.

2022 மார்ச் 31 தேதியின்படி ஐடிபிஐ வங்கியின் மூலதனம் மற்றும் ஆபத்து எடையுள்ள சொத்து விகிதம் (Capital-to-Risk Weighted Assets Ratio - CRAR) 19.06 விழுக்காடாகும்.  இந்த விகிதமானது முறைப்படுத்தும் அமைப்பான ரிசர்வ் வங்கியின் வரம்பான 11.5 விழுக்காட்டைவிட நன்றாகவே உள்ளது. மேலும் ஐடிபிஐ வங்கி 2021 மற்றும் 2022ஆம் நிதியாண்டிற்கான நிகர லாபத்தை அறிவித்துள்ளதோடு வங்கியின் மேம்படுத்தப்பட்ட மூலதன விகிதங்களுக்கும் பங்களிப்பை செய்துள்ளது. இதன் விளைவாக, தங்களது வளர்ச்சி தேவைகளை எதிர்கொள்வதற்குமான போதுமான மூலதனம் வங்கியில் உள்ளதென்று ஐடிபிஐ வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கழகம் இரண்டுமே அறிவித்துள்ளன.” இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.