states

img

உலக புகழ்பெற்ற படகுப் போட்டி: கேரளத்தில் செப் 4 இல் நடத்த முடிவு

ஆலப்புழா, ஜுன் 21- இந்தாண்டு நேரு கோப்பை நீர் விழாவை செப்டம்பர் 4ஆம் தேதி நடத்து வதற்கான பரிந்துரையை வழங்க பி.பி.சித்தரஞ்சன் எம்எல்ஏ தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 11ஆம் தேதி படகுப் போட்டி நடத்துவது குறித்து முதலில் பரிசீலிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 10ஆம் தேதி மற்ற படகுப் போட்டி நடத்த வாய்ப்பு உள்ளதால், அரசு அறி வுறுத்தலின் பேரில் செயற்குழு கூடி புதிய தேதியில் நடத்த முடிவு செய்யப் பட்டது. சுற்றுலாத் துறையின் ஒப்புதலுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.பி.சித்தரஞ்சன் எம்எல்ஏ தெரிவித்தார். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் இந்தப் படகுப் போட்டி, எப்போதும் இல்லாத அளவுக்கு விறுவிறுப்பாக நடைபெறும். நேரு டிராபி படகுப் போட்டியுடன் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியும் நடத்தப்படும் என்றார். இதற்கு முன்பு கடைசியாக நேரு  டிராபி படகுப் போட்டி, 2019 ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது. 2020 மற்றும் 2021 இல் கோவிட் பெருந்தொற்று பொதுமுடக்கத்தால் ஏற்பாடு செய்யப் படவில்லை.