states

களிமேடு தேர் விபத்து : ஒருநபர் குழு விசாரணை

தஞ்சாவூர், மே 24 -  களிமேடு தேர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும், ஒரு நபர் குழு, விபத்தில் காயமடைந்தவர்களிடம், விபத்து நடந்தது குறித்து வாக்குமூலம் பெற்று கணினியில் பதிவு செய்து கொண்டனர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், அப்பர் சதய தேர் திருவிழாவின் போது, கடந்த ஏப்.27 ஆம் தேதி அதிகாலை தேர் மின்கம்பத்தில் உரசி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதில், 24 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக தமிழக அரசு சார்பில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.   இதையடுத்து குமார் ஜெயந்த், கடந்த ஏப்.30 ஆம் தேதி, விபத்து நடந்த களிமேடு கிராமத்திற்கு சென்று தேரை பார்வையிட்டு, கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மே 1 ஆம் தேதி விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்தார். தொடர்ந்து, கிராம மக்கள், அலுவலர்கள் ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குமார் ஜெய்ந்த்,  காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டார். இதன்படி, காயமடைந்தவர்களில் 19 பேரிடம் செவ்வாயன்று ஆட்சியர் அலுவலகத்தில், தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டு, கணினியில் பதிவு செய்யப்பட்டது. இப்பணியினை 6 வட்டாட்சியர்கள் மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இவ்விசாரணை நடந்தது. இதுகுறித்து குமார் ஜெயந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை முடிந்து, தற்போது நல்ல நிலைமையில் இருப்பதால், அவர்களிடம், தேர் விபத்து எப்படி நடந்தது. காயமடைந்தவர்கள் எங்கு இருந்தார்கள் போன்ற பல்வேறு தகவல்கள் கேட்டு பெறப்பட்டன. ஏற்கனவே அதிகாரிகளிடம் பெறப்பட்ட அறிக்கைகள், தற்போது இவர்களிடம் பெறப்படும் வாக்குமூலம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, முழுமையான அறிக்கையை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்க உள்ளேன். இதுவே, பொதுமக்களிடம் விசாரிக்கப்படும் இறுதிக் கட்டமாகும். வருங்காலங்களில் இதுபோன்ற விபத்து நடக்கக் கூடாது என்பதற்காக, புதிய வழிமுறைகளை தயார் செய்து, அதுவும் அறிக்கையுடன் அளிக்கப்பட உள்ளது” என்றார்.

;