திருநெல்வேலி, ஆக 11- நாங்குநேரியில் இரவில் வீடு புகுந்து மாணவர்களான அண்ணன், தங்கையை அரிவாளால் வெட்டிய கொடூரச் சம்பவம் தொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி- அம்பிகாபதி தம்பதி யரின் மகன் சின்னதுரை (17). இவர் வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டி யது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கை 10-ஆம் வகுப்பு மாணவியான சந்திரா செல்விக்கும் கையில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சின்னத்துரையின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் அதிர்ச்சியினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் வியாழக்கிழமை நாங்குநேரி யில் நடந்தது. அப்போது போலீ சார் முறையான நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் போலீ சார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து குற்றவாளி களை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று கிருஷ்ணனின் உடல் அங்குள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவு களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப் பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீ ராம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் மதுபால், மாவட்டச் செயலாளர் சுடலைராஜ், வழக்கறிஞர் பழனி, தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி ஆகியோர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் சின்னத் துரை மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். மேலும் நடந்த சம்ப வத்திற்கு மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் கண்டனம்
இந்த சம்பவம் குறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஸ்ரீ ராம் கூறியதாவது தலை முதல் பாதம்வரைஉடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை.. இரண்டு கைகளும் கால்களும் அரிவாள்களால் வெட்டி கிழிக்கப் பட்டுள்ளன.. சினிமாவில் வரும் ‘சைக்கோ’ - போன்றவர்களால் தான் இது போன்ற கொடூரத்தை செய்ய முடியும். நெல்லை மாவட்டம் நான்கு நேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தை ச் சார்ந்த மாணவன் சின்னதுரையையும் அவனது தங்கையையும் இரவு10மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது சாதி வெறி பிடித்த சிறார் குழு. படிப்பில்,விளையாட்டில், ஒழுக்கத்தில், திறமையில் அப் பள்ளி யில் முன்னுதாரணமாக விளங்கி யுள்ளான் சின்னத்துரை. இவரைப் போல இருங்க என ஆசிரியர் பாராட்டி யுள்ளார். இவனெல்லாம் நமக்கு மேலயா? பெருந்தெரு சாதிப் பய... ! எங்க பேக்க தூக்கிட்டு வா, பான்பராக் வாங்கிட்டு வா, பேனா , பேப்பர் வாங்கிட்டு வா, மிரட்டல் அடி உதை என பல நாட் களாக டார்ச்சர் செய்து வந்துள்ளனர். அம்மா சத்துணவு பணியாளர். அப்பா வேறு மணம் செய்து பிரிந்து வாழ்கிறார். தாத்தா வீட்டில் தான் இவனும் அம்மா, தங்கையும் வசித்து வந்துள்ளனர். நமக்கு எதற்கு வம்பு. இனி நான் ஸ்கூலுக்கு போகல என அம்மா விடம் சொல்லி அழுதிருக்கிறான் சின்னத்துரை. அம்மா வும், தாத்தாவும் பள்ளிக்கு சென்று புகார் அளித்திருக்கிறார்கள். எங்க மேலேயே கம்ப்ளைன்ட் குடுப்பியா, இங்க தான வாழனும் என சின்னத்துரையையும் வெட்டி விட்டு அருகில் படுத்திருந்த தங்கையையும் வெட்டி சென்றுள்ளது . சம்பவத்தை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். காவல்துறை வழக்கு பதிந்து தனது கடமையை செய்துள்ளது. பொதுச் சமூகம் எதுவும் நடக்காதது போல கடந்து செல்கிறது என்று கூறியுள்ளார்.