அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஒன்றிய அரசு அழைப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, அக்னி பாதை திட்டம், மகாராஷ்டிர ஆட்சிக் கவிழ்ப்பு உள்ளிட்ட விவகாரங்களைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காங்கிரசில் இணைந்த இமாச்சல் மாநில பாஜக தலைவர்!
இமாசலப்பிரதேச மாநில பாஜக முன்னாள் தலைவர் கிமி ராம் சர்மா செவ்வாயன்று காங்கி ரஸ் கட்சியில் இணைந்தார். கிமி ராம் சர்மா இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்துள்ளார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், செவ்வாயன்று தில்லியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா முன்னிலையில் அவர் காங்கிரசில் இணைந்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இமாசல பிரதேச சட்டுப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு வலுவான போட்டியாக கிமி ராம் சர்மா இருப்பார் என்று கூறப்படுகிறது.
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை கியூட் நுழைவுத் தேர்வு
பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission - UGC) கீழ் நாடு முழு வதும் 45 மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. இங்கு மாணவர் சேர்க்கைக்கு இதுவரை யிலும், பிளஸ் 2 மதிப்பெண்களே தகுதியாக கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத் தேர்வு போல, இங்கும் ‘கியூட்’ (The Common University Entrance Test - CUET) என்ற தேர்வை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தாண்டுக்கான தேர்வு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் 544 மையங்களில் நுழைவு தேர்வு நடத்தப்படும்; தேசிய தேர்வு முகமை யின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சோனியா காந்தி ஜூலை 21-இல் ஆஜராக சம்மன்!
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ஜூலை 21-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி யுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜூன் 23-ஆம் தேதி அவருக்கு அமலாக்கத்துறை இரண்டாவது சம்மனை அனுப்பியது. அப்போது, ‘கொரோனாவுக்குப் பிந்தைய உடல் பாதிப்புகளிலிருந்து முழு மையாக குணமடையும் வரை விசாரணையில் ஆஜராவதிலிருந்து சில வாரங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில், விசாரணை யை 4 வாரம் ஒத்திவைத்த அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 20 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் காவிரியில் பாய்ந்தது. இதன் காரண மாக மேட்டூர் அணை வேகமாக நிரம்ப துவங்கியது. ஜூலை 12 காலை 68-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. இதனிடையே கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலி ருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ள தால், மேட்டூர் அணை விரைவிலேயே அதன் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
பெரியாறு அணைக்கு 1,144 கன அடி கூடுதல் நீர்வரத்து!
கேரளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு செவ்வா யன்று ஒரே நாளில் 1,144 கன அடி தண்ணீர் கூடுதலாக வந்தது. பெரியாறு அணையில், 44 மில்லிமீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 13 மி.மீ. மழையும் பெய்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 3,266 கன அடி தண்ணீர் வந்தது. ஒரு நாளில் மட்டும் விநாடிக்கு 1,144 கன அடி தண்ணீர் கூடுதலாக வந்தது. இதனால், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் செவ்வாய்க் கிழமை நிலவரப்படி 129.05 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 142 அடி), நீர் இருப்பு 4,493 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 3,266 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,655 கன அடியாகவும் இருந்தது.
கோத்தபய ராஜபக்சேவுக்கு கதவை மூடியது அமெரிக்கா
கொழும்பு, ஜூலை 12- இலங்கையில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடி யுரிமை பெற்றிருந்தார். 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போது வெளிநாட்டுப் பிரஜைகள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டதால் கோத்தபய ராஜபக்சே தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார். இலங்கையின் தற்போதைய நெருக்கடியின் பின்னணியில் கோத்தபய அமெரிக்காவிற்கு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அவரது கோரிக்கை நிராக ரிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஜூலை 13 (இன்று) கோத்தபய ராஜபக்சே அதிகா ரப்பூர்வமாக பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படு கிறது. பதவி விலகிய பின் எங்கு செல்லலாம் என்பது குறித்தும் அவர் யோசித்துவருவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளநிலை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை,ஜூலை 12 - இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு வரும் 17 ஆம் தேதி தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்க ளில் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட முக்கிய நகரங்க ளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இதன்படி தேர்வு விண்ணப்பங் களை சமர்பித்தவர்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் தங்களின் பதிவு மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி ஜூலை 12 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப் பட்டது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிக ளுக்கு 011-40759000 என்று தொலைபேசி எண் மற்றும் neet@nta.ac.in. என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வரவு செலவுகளை யாரிடமும் தரக்கூடாது: வங்கிகளுக்கு ஓபிஎஸ்
சென்னை,ஜூலை 12- அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தன்னை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொருளாளர் பதவி செல்லாது என்றும், இதனால் வங்கி கணக்கை நிறுத்தி வைக்கக் கோரி யும் அதிமுக கணக்கு வைத்துள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதில், ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பி னர் பதவியில் இருந்தும் நீக்குவதற் கான சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில், அதிமுகவின் பொருளாளர் நான்தான், தனக்கு தெரியாமல் வங்கி கணக்குகளை வேறு யாரும் கையாளக்கூடாது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொருளாளர் திண்டுக் கல் சீனிவாசன் பதவி செல்லாது. பொதுக்குழுவும் செல்லாது. இதனால் வங்கிக் கணக்கை நிறுத்தி வைக்க வேண்டும் என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி யுள்ளார்.
மகளிர் கல்லூரியில் தீ விபத்து
புதுச்சேரி, ஜூலை 12- புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் தரைத்தளத்தில் கணினி அறிவியல் பிரிவு துறைத்தலைவர் அறையில் திடீரென தீ பற்றியது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. மேல் தளங்களில் வகுப்புகளில் இருந்த மாணவிகள் அவசர, அவசரமாக வெளி யேற்றப்பட்டனர். கரும்புகை வேகமாக சூழத்தொடங்கிய சூழலில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து விரை ந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை,ஜூலை 12 - தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரண மாக, ஜூலை 13,14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளது. வட தமிழ்நாடு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.