நாமக்கல், ஜூன் 13- முற்போக்கு தமிழ் மரபின் முன்னத்தி ஏர்களில் ஒருவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், செம்மலர் இலக்கிய மாத இதழின் நிறுவனருமான தோழர் கு.சின்னப்ப பாரதி, நாமக்கல்லில் காலமானார். அவருக்கு வயது 88. சமீப காலமாக உடல் நலம் குன்றியிருந்த தோழர் கு.சி.பா, ஜூன் 13 திங்களன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள், தோழர்கள், எழுத்தாளர் இயக்க தோழர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து தோழர்கள் ஆழ்ந்த அஞ்சலியையும், இரங்கலையும் செவ்வணக்கத்தையும் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று மாலை நாமக்கல்லில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.