states

நைஜீரியா : தொழிற்சங்கக் கோரிக்கை ஏற்பு

அபுஜா, ஆக.3- போராட்டங்கள் தீவிரமடையும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்ததால் அவர்களால் எழுப்பப்பட்ட சில கோரிக்கைகளை ஏற்பதாக நைஜீரியாவின் ஜனாதிபதி பேலா டினுபு ஏற்றுக் கொண்டுள்ளார். ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியாவில் பெரும் பணக்காரர்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை ஜனாதிபதியும், அவரது அரசும் எடுத்து வருகின்றன. பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதால், உணவு மற்றும் அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மக்களைத் திரட்டி பெரும் போராட்டங்கள் நடக்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தன. மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுவதால் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும் என்பதை உணர்ந்த ஜனாதிபதி, சில கோரிக்கைகளை ஏற்க முடிவு செய்தார். குடும்பங்களுக்குப் பலன் தரும் வகையில் 2 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்கப்படும். உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என்று பேலா டினுபு உறுதி அளித்துள்ளார். விவசாயிகளுக்காக உரங்களுக்கான மானியங்களை அதிகரிக்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.