புதுதில்லி, ஜூன் 2 - ஓஎன்ஜிசி எனப்படும் ‘எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்’ (Oil and Natural Gas Corporation - ONGC) 2022 மார்ச் காலாண்டில் தனிப் பட்ட முறையில் ரூ. 8 ஆயிரத்து 859 கோடியே 54 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவன மான ஓஎன்ஜிசி, 2021-22 நிதியாண்டின் நான்காவது (ஜனவரி முதல் மார்ச் வரையிலான) காலாண்டு நிதி நிலை முடிவுகளை தற்போது வெளி யிட்டுள்ளது. அதில், ஓஎன்ஜிசி நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறை யில் நிகர லாபமாக ரூ. 8 ஆயிரத்து 859 கோடியே 54லட்சத்தை ஈட்டியுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 2021-ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டைக் காட்டிலும் 31.5 சத விகிதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் தனிப்பட்ட முறையில் ரூ. 6 ஆயிரத்து 733 கோடியே 97 லட்சத்தையே நிகர லாபமாக ஈட்டியிருந்தது. அதேபோல 2022 மார்ச் காலாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயற்பாட்டு வாயிலான வருவாய் ரூ. 34 ஆயிரத்து 497 கோடியே 24 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவும் முந்தைய 2021 மார்ச் காலாண்டில் ரூ. 21 ஆயிரத்து 188 கோடியே 91 லட்சம் என்ற அளவிற்கே இருந்தது. மேலும், கடந்த 2021-22 முழு நிதி யாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 40 ஆயிரத்து 305 கோடியே 74 லட்சமாக உயர்ந்துள் ளது. ஆனால், முந்தைய 2020-21 நிதி யாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ. 11 ஆயிரத்து 246 கோடியே 44 லட்சம் என்ற அளவிலேயே நிகர லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.