states

img

22 நாட்கள் சட்டமன்ற கூட்டம்

சென்னை,மார்ச் 30- தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரை தொடர்ந்து, மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மார்ச் 30 அன்று  அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பிறகு, இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேரவைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே மாதம் 10 ஆம் தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வு குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத் தொடர் மொத்தம்  22 நாட்கள் கூட்டம் நடக்கும். கடந்த முறை போன்றே கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். பேரவை நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிப்பரப்பு படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

விவாதங்கள் விவரம்:

ஏப்ரல் 6 ஆம் தேதி நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாத மும் அமைச்சரின் பதிலுரையும் இடம்பெறுகிறது. இதை தொடர்ந்து  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப் படும். ஏப்.7 ஊரக உள்ளாட்சி, நகராட்சி, ஏப்.8 கூட்டுறவு,உணவு, ஏப்.11 உயர்க்கல்வி, பள்ளிக் கல்வி, ஏப். 12 நெடுஞ்சாலை, பொதுப் பணி  ஏப்.13 வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால்வளம், ஏப்.19 சட்டம், செய்தி-விளம்பரம், ஏப். 20 வீட்டு வசதி, குறுசிறு தொழில்கள், ஏப்.21 சமூக  நலன், மாற்றுத்திறனாளிகள், ஏப். 22 பிசி, எம்பிசி ஆகிய துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் பதிலுரை. ஏப். 25 அன்று வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன்,ஏப். 26 மின்சாரம்,  மதுவிலக்கு, தொழிலாளர் நலன், ஏப்.27 தொழில்துறை, தமிழ் வளர்ச்சி, ஏப்.28 கைத்தறி, கதர் கிராம தொழில்கள், வணிக வரி. மே 4 போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல், மே 5 இந்து சமய  அறநிலையங்கள், சுற்றுலா, ஏப். 6 ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள்.

காவல்துறை

முதலமைச்சர் பொறுப்பில் உள்ள காவல் துறை, தீயணைப்பு துறை மீதான விவாதம் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் மீதான விவாதங்கள்  2 தினங்கள் நடைபெறும். மே 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பதில் அளிக்கிறார். மே 9 திட்டம், வளர்ச்சி, நிதி, மனித வளம், ஓய்வூதியங் கள், மே 10 ஆம் தேதி பொதுத்துறை மானியக் கோரிக்கையுடன் பேரவை  முடிகிறது.