states

img

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

கேரளத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) அவசர அவசரமாக மேற்கொள்ள முயற்சிக்கும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், பாஜகவுக்கு எதிரான வாக்காளர்கள், சிறுபான்மையினரின் வாக்குகளை நீக்கும் மறைமுகத் திட்டத்துடன் கடுமையான நிபந்தனைகளை தேர்தல்  ஆணையம் விதித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.  பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர்  பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை செய்து வருகிறது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) அவசர அவசரமாக மேற்கொள்ள முயற்சிக்கும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை முன்வைத்த முதல்வர் பினராயி விஜயன், தேர்தல் ஆணையம் அவசரமாக எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்த முயற்சிக்கு நடவடிக்கைக்கு பின்னால் “தீய நோக்கம்” இருப்பதாக சந்தேகத்தை வெளிப்படுத்தினார். மேலும், எஸ்.ஐ.ஆர் மூலம் பின்வழியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) அமல்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்தார்.

கேரளாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதற்குப் பின் சட்டசபைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அவசரமாக SIR நடத்துவது தீய நோக்கம் கொண்டதாகும் என அவர் தீர்மானத்தில் வலியுறுத்தினார்.

வாக்காளர் பட்டியலில் நடைபெறும் திருத்தங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இத்தீர்மானத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.