states

img

‘லைப்’ திட்டத்தில் மேலும் 20,808 வீடுகள் 6 ஆண்டுகளில் வழங்கியது 2,95,006 வீடுகள்

திருவனந்தபுரம், மே 18- இடதுசாரி அரசின் முதலாம் ஆண்டு விழாவின் இரண்டாம் நூறு நாள் விழாவின் ஒரு பகுதியாக லைப் திட்டத்தில் 20,808 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. செவ்வாயன்று (மே 17) திருவனந்தபுரம் மாவட்டம், கடினம்குளம் பஞ்சாயத்தில் 16 ஆவது வார்டில் அமிருத்- ஆயிஷா பீவி ஆகியோரின் வீட்டின் சாவியை முதல்வர்  பினராயி விஜயன்  வழங்கினார். அதே நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பிற வீடுகளின் சாவிகளும் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது:

சொந்த வீடு இருப்பது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகும். எல்டிஎப் அரசாங்கத்தின் விரிவான வீட்டுப் பாதுகாப்புத் திட்டமான லைஃப் மிஷன் மூலம் கேரளாவில் லட்சக்கணக்கான குடும்பங்கள் வீட்டு வசதிகள் குறித்த தொடர்ச்சியான பாதுகாப்பின்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. ஒரு துண்டு நிலம் கூட இல்லாதவர்கள், சொந்த நிலத்தில் தொடங்கிய வீட்டு வேலைகளை நிறைவு செய்ய முடியாதவர்கள் உட்பட வீடற்றவர்களின் பிரச்சனையை முழுவதுமாக லைப் திட்டம் கையாள்கிறது. அதிகபட்ச பயனாளிகளை வீடு வழங்கும் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதே லைப் திட்டத்தின் நோக்கம்.

சமூகத்தில் நலிந்தவர்களை கண்டறிந்து முதலில் அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகிறது. மனவளர்ச்சி குன்றியோர், உடல் ஊனமுற்றோர், ஏழைகள், மூன்றாம் பாலினத்தோர், படுக்கை நோயாளிகள், திருமணமாகாத தாய்மார்கள், வேலையும் வருவாயும் இல்லாதவர்கள், விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அரசின் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நோய்த்தடுப்பு சிகிச்சை வசதிகளை நிலமற்றவர்களுக்கான வீட்டு வசதி திட்டங்களில் சேர்க்க கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இடதுஜனநாயக முன்னணியின் இரண்டாவது அரசின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக இரண்டாவது 100 நாள் செயல்திட்டத்தில் 20,808 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. முன்னதாக, அரசாங்கத்தின் முதல் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, 12,000 வாழிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, சாவிகள் வழங்கப்பட்டன. கேரளாவை வீடற்றவர்கள் இல்லா மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் 6 ஆண்டுகளில் லைப் திட்டத்தின் மூலம் 2,95,006 வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. 34,374 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. மேலும், 27 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

நிலமற்ற மற்றும் வீடற்றோருக்கு வீடு கட்டித்தர நிலம் கண்டறியும் நோக்கில் அரசாங்கம் “மனசோடு இத்திரி மண்” (மனதார சிறிதளவு மண்) என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. 2022 மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஏற்கனவே 1712.56 சென்ட் நிலத்தைப் பெற்றுள்ளது. 35 உள்ளாட்சி அமைப்புகளில் 41 இடங்களில் இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, 1000 பேருக்கு நிலம் வழங்க, ரூ.25 கோடி நிதியுதவி பெறப்பட்டுள்ளது. வீடற்றவர்களுக்கு நிலம் தேடித் தரும் பிரச்சாரத்தை அரசு தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.