கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சியல்டா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த 8ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட பலரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில், மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாங்குவதில் சந்தீப் கோஷ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார்.
மருத்துவர் கொலை வழக்கை கடந்த நவம்பர் 12-ஆம் தேதி முதல் சியல்டா மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் சஞ்சய் ராய், குற்றவாளி என கடந்த 18-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ளது. மேலும், குற்றவாளிக்கான தண்டனை விபரங்கள் ஜனவரி 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சியல்டா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.