உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர் பகுதியில் ஏற்பட்ட கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக டேலா நதியில் கடுமையான வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இன்று அதிகாலை 10 சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு காரில் வந்துள்ளனர். அப்போது ராம்நகர் பகுதியை கடந்த போது டேலா நதி வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ள விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். நாசியா என்ற 22 இளம் பெண் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடுமையான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 4 உடல்களை மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், வெள்ளத்துக்குள் சிக்கியிருக்கும் காரிலிருந்து மற்ற உடல்களை மீட்க மீட்புக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட இளம்பெண் ராம்நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் கௌரவ் சடாவல் தெரிவித்தார். மேலும் விசாரணை நடத்தியதில், காரின் பதிவு எண்ணை வைத்து உயிரிழந்தவர்கள் பஞ்சாப்பின் பாட்டியாலா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இருவர் மட்டும் உத்தரகாண்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.