states

img

பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசிய பாஜக அமைச்சர்  

லக்கிம்பூர் - மகனை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளரை அமைச்சர் அஜய் மிஸ்ரா தரக்குறைவாக பேசியுள்ளார்.  

உத்தரப்பிரதேசம் – லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவரை அமைச்சர் அஜய் மிஸ்ரா தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.  அதில் பத்திரிகையாளர் ஒருவர் லக்கிம்பூர் சம்பவ விசாரணைக் குழு அறிக்கையை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர், இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகளை கேட்காதீர்கள். நீங்கள் என்ன பைத்தியமா? திருடர்களே, என தரக்குறைவாக பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து ஆஷிஷ் மிஸ்ரா மீது புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய குற்ற பத்திரிகையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதே என பத்திரிகையாளர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அஜய் மிஸ்ரா பத்திரிகையாளரிடமிருந்த மைக்கையும் பறிக்க முயற்சி செய்தார். இந்த சம்பவம் லக்கிம்பூர் கெரியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை திறக்கவந்தபோது நிகழ்ந்துள்ளது.  

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பது திட்டமிட்ட சதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு மத்தியில், மத்திய அமைச்சரவையிலிருந்து அஜய் மிஸ்ரா நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.