states

தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது! - ஆளுநர் உரையாற்றுகிறார்

ஆளுநர் உரையாற்றுகிறார் சென்னை, ஜன. 5 - தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2025-ஆம்  ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த டிசம்பர் 9, 10 ஆகிய 2 நாட்கள் கூடியது. இதில் பல்வேறு சட்ட மசோதாக் கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த கூட்டம் கூடும் தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர்,  சட்டப்பேரவையின் 2024ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என். ரவி அண்மையில் முடித்து வைத்தார். இந்நிலையில், 2025-ஆம் ஆண்டுக் கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஜனவரி  6 ஆம் தேதி கூட்டியுள்ளார். அன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையாற்ற உள்ளார்.  ஆளுநர் உரை நிகழ்த்தி முடித்ததும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் வாசிப்பார். அத்துடன் அன்றைய நிகழ்ச்சி கள் முடிவுபெறும். அன்றே, அலுவல் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்து வது என்பதை முடிவெடுக்கும். கடந்த முறை உரையின் முதல் பக்கம்  மற்றும் கடைசிப் பக்கத்தை மட்டுமே ஆளு நர் ரவி வாசித்தார். இந்த முறை முழுமை யாக வாசிப்பார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில், மாநிலத்தின் முதல் குடிமகன் என்பதால் பேரவையில் உரையாற்ற வரு மாறு அவரை அழைக்கலாம். அதைத் தவிர, முழுமையாக பேசுமாறு வலியுறுத்த முடியாது.  அதேபோல அரசியலமைப்பு சட்டத்தின் 176-ஆவது பிரிவின்படி, சட்டப்பேரவை யில் உரையாற்ற மட்டுமே ஆளுநருக்கு அனுமதி உள்ளது. கருத்துச் சொல்லும் அதி காரம் அவருக்கு இல்லை. முதல்வர், அமைச்சரவை கூடி எழுதிக் கொடுப்பதை தான், ஆளுநர் வாசிக்க வேண்டும். சொந்தக் கருத்துகளையோ, பிரச்சனை களையோ சொல்ல உரிமை இல்லை. 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே சட்டப்பேரவையில் கருத்து சொல்ல அனுமதியுள்ளது. தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தேர்தல் நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி  அலுவலர்களை நியமிக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.