states

கோவில் உபரி நிதியை சிறிய கோவில்களின் பணிக்கு வழங்க நடவடிக்கை

சென்னை,ஏப்.24- பெரிய கோவில்களின் உபரி நிதியை சிறிய கோவில்களின் திருப்பணிக்காக மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு : இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இதில் ஏறக்குறைய 35 ஆயிரம் கோவில்களின் ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகும். நிதி வசதிமிக்ககோயில்களின் உபரி நிதியினை திருப்பணிக்காக நிதி உதவி தேவைப்படும் பிற  கோயில்களுக்கு மானியமாக வழங்கினால் பல்லாயிரக்கணக்கான கோயில்களை புனரமைத்து, திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய இயலும். எனவே போதிய வருவாய் இல்லாத  கோயில்களை நிதிவசதிமிக்க கோயில்களிலிருந்து  மானியம் பெற்று புனரமைத்திட அறிவுரை வழங்கப்பபட்டுள்ளது.அனைத்து இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில், சரகத்தில் உடனடியாக ஆய்வு செய்தும் அவற்றின் நிதிநிலைமையை பரிசீலித்தும் நிதி உதவி தேவைப்படும் கோயில்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். நிதி உதவி அளிக்கக்கூடிய அளவில் உபரி நிதி உள்ள கோயில்களின் பட்டியலை நிதி வசதியற்ற கோயில்களின் நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும். நிதி உதவி தேவைப்படும் கோயில்களின் நிர்வாகிகள் திருப்பணி வேலைகளுக்கான விரிவான மதிப்பீடுகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தயார் செய்து அதனடிப்படையில் தேவைப்படும் நிதியினை மானியமாக வழங்கக்கோரி நிதி வசதிமிக்க கோயில்களின் நிர்வாகிகளுக்கு எழுத்துபூர்வமாக மனு அளிக்க வேண்டும். நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியின் அடிப்படையில் விதிகளைப் பின்பற்றி திருப்பணி வேலைகள் தொடங்கப்பட வேண்டும் என அனைத்து சார்பு  நிலை அலுவலர்களுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் இந்த அறிக்கையை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.