states

img

கோடநாடு கொலை வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம்  சி.பி.சி.ஐ.டி போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, கடந்த 2022 முதல் சிபிசிஐடி சிறப்பு விசாரணைக் குழு டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையில் விசாரித்து வருகின்றனர். இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் வழக்கில் ஏற்கனவே கைதான சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரிடம் மறு விசாரணை செய்யப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சசிகலா கோடநாடு வந்த போது கொள்ளை தொடர்பாக ஏதாவது கேட்டறிந்தாரா? எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள், பாதுகாப்பு குறித்து விசாரணை நடந்தது. 
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கினர். இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரி  வீரபெருமாள் விசாரணைக்கு ஆஜரானார். 
அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் முதல்வரின் பாதுகாப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ் என்பவர், கோடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக விசாரணை நடந்த நிலையில், அந்த செல்போனை ஆய்வாளர் கனகராஜ் போலீசிடம் ஒப்படைத்தாரா? பறிமுதல் செய்யப்பட்டதா? எதற்காகக் குறுஞ்செய்தி அனுப்பினார் என விசாரிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெறவுள்ளது.