பள்ளிகளில் ஆன்மீகம் என்ற பெயரில் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை புகுத்துவதா ?
கல்வி நிலையங்களில் மதச்சார்பின்மையை பாதுகாத்திட மாணவர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகளிலும் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி (புதன்கிழமை) அன்று நன்னெறிக் கல்வி அளிப்பதாக கூறி ஆன்மீகம் என்ற பெயரில் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரம்பொருள் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தைச் சார்ந்த மகாவிஷ்ணு என்பவர் பேசிய காணொலி செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதை தடுக்க வந்த பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் கொச்சைப்படுத்தும் விதத்தில், “இவ்வளவு காலம் ஆசிரியர்களால் போதிக்க முடியாத கல்வியை ஆன்மீகம் என்ற பெயரில் தான் போதிப்பதாகவும், இதற்கு ஆசிரியர்கள் அவருக்கு நன்றி கூற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.” அரசு பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது என்ற ஆசிரியரின் வாதத்திற்கு, அரசு பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா என்று கேட்கிறார்.
சாதியப்படி நிலைகளை நியாயப்படுத்தும் பேச்சு
மாநில அரசின் நிதியை முழுமையாக பெற்று இயங்கக்கூடிய எந்த ஒரு கல்வி நிறுவனமும் மதச்சார்பு தன்மையில் செயல்படக் கூடாது என்பதையே இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 28 வலியுறுத்துகிறது. ஆனால் அங்கு நடைபெற்ற நிகழ்வில் அவர் மதச்சார்புடைய கருத்துக் களை பேசியதுடன் சாதிய படிநிலைகளை நியாயப்படுத்தும் விதத்தில் பேசியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இறுதிவரை கேள்வி எழுப்பிய ஆசிரியரின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் “உங்கள் முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் அறிவு பெற்றவரா ?” என்று அதிகாரத் திமிருடன் அவர் எழுப்பும் கேள்விக்குப் பின்னால், தமிழக அரசின் கீழ் செயல்படக்கூடிய பள்ளிக்கல்வி துறையின் உயர் அதிகாரிகளின் முழு அனுமதியை பெற்றுத் தான் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. தமிழக அரசின் கீழ் செயல்படக்கூடிய பள்ளிகளில் இந்துத்துவா கருத்துகளை பரப்பக்கூடிய இத்தகைய நபர்கள் எந்த அடிப்படையில் மாணவர்களிடையே உரையாற்ற பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்தது? குறிப்பாக 18 வயதுக்கு கீழே குழந்தை பருவத்தில் உள்ள மாணவர்களிடம் இப்படிப்பட்ட நபர்களை பேச அனுமதித்தது மிகவும் தவறு.
சாதாரணமாக கடந்து செல்லும் நிகழ்வு அல்ல
அதேபோல் நேற்றைய முன் தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளனர். அதில் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்தான உறுதிமொழி ஏற்பு நடத்திட வேண்டுமென குறிப்பிட்டிருந்தது. பிறகு அது சமூக வலைதளங்களில் வெளிவந்து பல மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் எதிர்த்து குரல் எழுப்பிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதனை திரும்ப பெற்றது. தொடர்ந்து கல்வியில் மதவாதக் கருத்துக்களை புகுத்தும் வகையில் நடைபெறக்கூடிய இத்தகைய நிகழ்வுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் நடைபெற்று வருவது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய நிகழ்வு அல்ல.
மதச்சார்பின்மை செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்
உடனடியாக இதில் சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு; மீண்டும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும். அதோடு சம்பவம் நடைபெற்ற அதே பள்ளிகளில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தி இந்த பிற்போக்கு கருத்தியல் உரையாடலுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் மதச்சார்பின்மையை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசின் கீழ் செயல்படக்கூடிய கல்வி நிலையங்கள் செயல்பாடு களை முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச்செயலாளர் கோ. அரவிந்த சாமி ஆகியோரின் அறிக்கை