states

ஐராவதம் மகாதேவன் ஆய்வு இருக்கைக்கு ரூ. 2 கோடி சிந்துவெளி எழுத்து முறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் ரூ. 8.57 கோடி பரிசு!

சென்னை, ஜன. 5 - சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையைப் புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவுப் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை மூன்று நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அப்போது, “அறிஞர் பெருமக்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன்” என்று கூறி, “செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசாக வழங்கப்படும்” என்று அறிவித்தார். “சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும்; தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்” என்று மேலும் அறிவித்த முதல்வர், “இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார். முன்னதாக, “சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழினத்தின் பெருமை நிரம்பி இருக்கிறது.  இன்னும் ஏராளமான ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன என்று முதல்வர் குறிப்பிட்டார்.