states

img

பயங்கரவாதத்தின் மையமாக மாறிவரும் திரிபுரா

அகர்தலா, செப். 27 - பாஜக - ஐபிஎஃப்டி கூட்டணி ஆட்சியில் திரிபுரா  பயங்கர வாதத்தின் மையமாக மாறி வருகிறது என  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சௌத்ரி குற்றம்சாட்டினார். திரிபுரா மாநிலம் கொவாய் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுபாஷ்பூங்காவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சௌத்ரி, மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினர் சதரூப்  கோஷ், கொவாய் சட்டமன்ற உறுப்பினர் நிர்மல் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஜிதேந்திர சௌத்ரி, “பாஜக - ஐபிஎஃப்டி கூட்டணி திரிபுரா  பயங்கரவாதத்தின் மையமாக மாறி வருகிறது. மாநிலத்தை பாஜக எதேச்சதிகாரம்- ஜனநாயக விரோத  ஆட்சியின் ஆய்வகமாக மாற்றிவிட்டது. மக்கள் வலுக்கட்டாய மாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி இல்லை” என்றார். 

சதரூப் கோஷ் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மக்கள் கட்சி என்பது மக்களின் இதயங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சாமானிய மக்களே எங்கள் கட்சியின் உயிர் சக்தி. அதனால் தான் திரிபுரா, மேற்கு வங்கத்தில் தியாகி களின் ரத்தம் தோய்ந்த செங்கொடியை உயர்த்திப் பிடித்து இன்றும் மக்கள் போராடி வருகின்றனர்.  நிருபன் சக்ரவர்த்தி, தசரத்  தேவ், பிரேன் தத், வைத்யநாத் மஜூம்தார் போன்ற முதுபெரும் தலைவர்களின் மண்ணையும் மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கைவிடாது. எதிர்வரும் காலங்களில் திரிபுரா தலை நிமிர்ந்து நிற்கும்.  பாஜக ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது.  மக்கள் வாழ்ந்தால் தான் நாடும் வாழும். பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து லட்சக் கணக்கில் பணம் பெறப்படுகிறது. பிஎம் கேர்ஸை மக்கள் இப்போது “பிக்பாக்கெட்டுகள்” என்று அழைக்கிறார்கள்.

திரிபுராவில் புதிய பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசு  உருவாக்கியுள்ளதா? மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளதா?  மாநில அளவில் பல்கலைக்கழகம் உருவாக்கி யுள்ளதா? எய்ம்ஸ் மருத்துவமனையோ அல்லது அதற்கு இணையான மருத்துவமனையையோ திரிபுராவில் அமைக்கவில்லை.  கல்வியை தனியார்மயமாக்குவதால்  ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் குழந்தை களுக்கு  கல்வி எட்டாக்கனியாகி வருகிறது. வேலையில்லா தவர்கள் வேலை கேட்டுப் போராடினால் அவர்கள் தாக்குத லுக்குள்ளாகிறார்கள்” என்றார். சுபாஷ் பூங்காவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் 2018-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக  கும்பலின் தாக்குதலால் மூடப்பட்டது. சுமார் 55 மாதங்களுக்குப் பிறகு, இந்த அலுவலகம் ஞாயிறன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே தலைவர்கள் மேற்கண்டவாறு பேசினர்.

அலுவலகம் திறப்பு மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வு குறித்துப் பேசிய திரிபுரா  சட்டமன்ற உறுப்பினர்  நிர்மல் பிஸ்வாஸ், அலு வலகத் திறப்பையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தவிடாமல் செய்வதற்கு ஆளுங்கட்சி முயற்சித்தது; பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்ட இடம் வழங்கப்படவில்லை; இதையடுத்து கட்சி அலுவலகத்தையொட்டியுள்ள சிறிய இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது; கூட்டம் துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன், பேரூராட்சி நிர்வாகம் மூன்று குப்பை வண்டிகளைக் கொண்டு வந்து, மேடைக்கு அருகில் நிறுத்தினர். இதற்கு மக்கள் எதிர்ப்புத்  தெரிவித்ததால் குப்பை அள்ளும் வாகனம் அகற்றப்பட்டது என்றார்.