states

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மீது வழக்கு : சிபிஎம் கண்டனம்

சென்னை, செப்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி எழுதியதாக குறிப்பு ஒன்று ஊடகங்களில் வெளிவந்தது. பிறகு அதன் மீது தடயவியல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட தபாலாக வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தடயவியல் வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல்களை குறிப்பிட்டு ஒரு செய்திக் கட்டுரையை பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் எழுதியிருந்தார். அதற்காக அவரை வீட்டிலிருந்து இழுத்துவந்து கைது செய்த காவல்துறை 4 பிரிவுகளில் வழக்கும் தொடுத்திருக்கிறது.

பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக முறையான நடவடிக்கை இல்லாத சூழலில் மக்கள் போராட்டங்களும், சட்டப் போராட்டங்களும் எழுந்தன. அதன் பிறகே இவ்வழக்கில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முறையான நடவடிக்கையில் தவறிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக முதலமைச்சரை சந்தித்தபோது குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதியை வழங்கினார். ஆனால், தற்போது காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நேர்மாறானதாக இருக்கின்றன. தடயவியல் ஆய்வுகளின் முடிவுக்கும் ஊடக செய்திக்கும் இடையில் மாறுபாடு இருந்தால் அதை வெளிப்படையாக மறுத்திருக்கலாம். அதற்கு மாறாக, பத்திரிகையாளர்களை மிரட்டும் விதத்தில் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள்.

மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளில் உள்ள குழப்பங்களும், மரணம் நடைபெற்ற விதம் தொடர்பான சந்தேகங்களும் இப்போதும் தொடர்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாருக்கு கூட வழக்கு தொடர்பான விபரங்கள் பகிரப்படவில்லை.  இன்னொரு பக்கத்தில் மரணமடைந்த மாணவியின் மீது  ஆதாரமற்ற அவதூறுகள் அள்ளி வீசும் விதத்திலும்,  தரம் தாழ்ந்து அவரின் குடும்பத்தாரை விமர்சிப்பதும், மிரட்டுவதாகவும் மேற்கொள்ளப்படும் ஊடக பதிவுகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக பேசுவதற்கு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடு சட்டத்திற்கு விரோதமானது. ஆனால், பள்ளி நிர்வாக தரப்பில் நின்று அவதூறு பேசுவோரை அனுமதிப்பதும், அதற்கு மாறான கேள்விகளை முன்வைப்போரை மட்டும் கைது செய்வதும் என்ன நோக்கத்தின் அடிப்படையிலானது? ஏற்கனவே, போராட்டத்தில் வன்முறையை விதைத்தவர்களை கைது செய்கிறோம் என்ற பெயரில் ஏராளமான அப்பாவிகள் கைது செய்யப்பட்டு மிரட்டப்படுகிறார்கள். இப்போது பத்திரிகையாளர்கள் மீதும் காவல்துறை பாய்கிறது. இது சிபிசிஐடி விசாரணையின் மீது அவநம்பிக்கை படரச் செய்திடும், முதலமைச்சர் கொடுத்த உறுதிக்கே நேர்மாறாக அமைந்திடும்.  எனவே, பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதுடன், வெளிப்படைத்தன்மையுடன் நியாயமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும்.