states

ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர் ரவுடி சரவணன் துப்பாக்கி முனையில் கைது

சென்னை,ஜன.16- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பிரபல ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன் உள்ளிட்டோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க அவரின் தீவிர ஆதரவாளரான ஏ பிளஸ் ரவுடியான சரவணன் காத்திருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உளவுத்துறை அறிக்கை கொடுத்திருந்தது. இதையடுத்து, ரவுடி சரவணனை சென்னை மாநகர காவல்துறையினர் தேடிவந்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். இதற்கிடையில் சரவணன் மீதான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்டும் பிறப்பித்திருந்தது.  அதனால், சென்னைப் போலீஸார் வடமாநிலங்களில் அவரைத் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் சரவணன் சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருக்கும் தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அங்குச் சென்ற போலீஸார் அவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.  போலீசாரை கண்டதும் சரவணன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீஸார் சரவணனின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்தார். இதையடுத்து சரவணனை மீட்ட போலீஸார், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஐ மணி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவ இடத்திலிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கத்திகள், பட்டன் கத்தி ஒன்று, கஞ்சா பொட்டலம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். ரவுடி சரவணன் மீது 6 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் இதர வழக்குகள் 16 ஆகியவை உள்ளன. 5 தடவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் ஜாமினில் வெளியில் வந்த சரவணன், நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராமல் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.  சரவணன் கைதான தகவலையடுத்து அவரின் மனைவி மகாலட்சுமி, சென்னை காவல் ஆணையருக்கு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதன்பிறகே பாம் சரவணன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியில் தெரியவந்தது.