states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பெங்களூரு கட்டிட விபத்து:  தமிழக அரசு நிவாரணம்

பெங்களூரு,அக்.24- பெங்களூரு கட்டிட விபத்தில் பலியான  2 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். கர்நாடக மாநி லம், பெங்களூரு, ஹென்னூ ரில் அக்டோபர்  22  அன்று கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலியாகி னர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணி கண்டன் மற்றும் சத்திய ராஜ் ஆகிய இருவரும் உயி ரிழந்தனர்.  இவர்களின் குடும்பத்தி னருக்கும்,  உறவினர் களுக்கும் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதல்வர், அவர்களின் குடும்பத்தின ருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியி லிருந்து வழங்கிட உத்தர விட்டுள்ளார். 

அரிசி ஏற்றுமதி  கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம் 

புதுதில்லி, அக். 24 - பாசுமதி அல்லாத அரிசி வகைகளுக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் ஒன்றிய அரசு தடை விதித்தது. இதை கடந்த மாதம் 28-ஆம் தேதி நீக்கிய ஒன்றிய அரசு, அரிசிக்கான ஏற்றுமதி வரியையும் ரத்து செய்தது. அதேநேரத்தில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்தது. அதாவது டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 490 டாலர் (சுமார் ரூ.41,200) நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் இந்த குறைந்தபட்ச ஏற்று மதி விலை கட்டுப்பாட்டை யும் ஒன்றிய அரசு நீக்கியுள் ளது. அதேபோல நெல் உள் ளிட்ட புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரி 20 சத விகிதத்தி லிருந்து 10சதவிகிதமாக வும் குறைக்கப்பட்டுள்ளது.

போதை இல்லா தமிழகம் உருவாக்க ஒன்றிணைவோம் : முதல்வர் அழைப்பு

சென்னை,அக்.24- ‘போதை இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் சமுதாயத்திற்கு, உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடி கேட்கிறேன். போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம். தமிழகத்தை போதை இல்லா மாநிலமாக உருவாக்குவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

பல்கலை.பட்டமளிப்பு நிகழ்ச்சி ஆளுநருக்கு எதிராக அமைச்சர்கள் புறக்கணிப்பு

சென்னை, அக்.24- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை  வழங்கினார். இந்த விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநரின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வரும் காரணத்தால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து புறக்கணித்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், சென்னையில் வியாழனன்று (அக்.24) நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் புறக்கணித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் வழக்கு  வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை,அக்.24- அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

விளக்கம் கேட்டு யூடியூபர்   இர்பானுக்கு  நோட்டீஸ்:  அமைச்சர்

சென்னை,அக்.24- சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள  ஒரு தனியார் மருத்துவ மனையில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி யூடியூபர் இர்பானின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அப் போது குழந்தை பிறந்தது முதல் அறுவை சிகிச்சை நடைபெற்ற அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை கேமரா வில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19 ஆம் தேதி இர்பான் பதிவு செய்தார். இர்பானின் செயல் தமிழ்நாடு மருத்துவ சட்டத் தின்படி தவறு என மருத்து வர்கள் கண்டனம் தெரி வித்தனர்.  இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச் சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  இர்பான் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இர்பான் மற்றும் சம்பந்தப் பட்ட மருத்துவமனை மீது  காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. பிரசவம் நடை பெற்ற மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. சம்பந்  தப்பட்ட மருத்துவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்” என்று தெரிவித்தார்.

இரண்டாவது நாளாக  அமலாக்கத்துறை சோதனை

சென்னை,அக்.24- அதிமுக ஆட்சிக் காலத் தில் அடுக்குமாடி குடி யிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், முன் னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் தொடர் புடைய இடங்களில் அம லாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (அக்.24) இரண்டாவது நாளாக சோத னை நடத்தினர். 6 இடங் களில் இந்த சோதனை நடை பெற்றது.

ஊக்கத்தொகை ரூ.100 கோடியை வழங்கிடுக! நவ.11 இல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

சென்னை,அக்.24- பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை சுமார் ரூ.100 கோடியை வழங்கக்கோரியும் பல்வேறு   கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் 19.11.2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் அக்டோபர் 22 அன்று சங்கத்தின் தலைவர் கே.முகமது அலி தலைமையில் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.பெருமாள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊக்கத்தொகை சுமார் ரூ.100 கோடியை, தமிழ்நாடு அரசு கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை. இதனை தீபாவளிக்குள் உடனடியாக வழங்கவேண்டும். கால்நடைத் தீவணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பசும்பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.45. எருமை பாலுக்கு ரூ.54 என கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்திடவேண்டும். தரமான கால் நடைத் தீவனங்களை தமிழ்நாடு அரசு 50 சதவீத மானியவிலையில் வழங்க வேண்டும். வேளாண் பொருள்களுக்கு கொள்முதல் விலை அறிவிப்பதைப் போல பாலுக்கும் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசு கொள்முதல் விலையை அறிவித்திட வேண்டும். ஆவின் பால் கொள்முதல் தமிழ்நாட்டில் தினம் 1 கோடி லிட்டராக உயர்த்தவேண்டும். முதல் கட்டமாக 50 லட்சம் லிட்டராக உயர்த்தவேண்டும். இதற்கான கட்டமைப்பை உருவாக்கவேண்டும். குழந்தைகள் சத்துணவுத்திட்டத்தில் “ஆவின்” பாலையும் சேர்த்து வழங்கிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை அமர்வு) 25.10.2017 அளித்த தீர்ப்பின்படி பால் கொள்முதல் செய்யும்போது பாலின் அளவு, சத்துக்களை குறித்துக் கொடுத்திட வேண்டும். தொடர்ந்து அமல்படுத்த மறுப்பது சரியல்ல. பால் திருட்டிற்கு உடந்தையாக நிர்வாகம் செல்வது போன்றதாகும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நவம்பர் 19  அன்று அனைத்து மாவட்டக்களிலும் பால் உற்பத்தியாளர்கள், அனைத்து கறவை மாடுகளுடன் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

‘அதிமுகவை ஒற்றுமையாக வைத்திருக்க முடியாதவர் எடப்பாடி பழனிசாமி’

பெண்களுக்கு எதிரான வன் முறைகளைக் கட்டுப்படுத்த மாநில அளவில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் வியாழனன்று செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா முழு வதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரு கின்றன. குழந்தைத் திருமணங்களைத் தடுக்க மாநில அரசுகள் குழு அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது” என்றார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி அடிக்கடி இந்தியா கூட்டணியை விமர்சித்து வருகிறார். ஆனால் ஜெயலலிதா மறை வுக்குப் பிறகு அதிமுகவை ஒற்றுமையாக வைத்திருக்க முடியாதவர், எப்படி வலுவான கூட்டணி அமைப்பார்?” என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்த அவர், “சர்வதேச அளவில் கச்சா  எண்ணெய் விலை 30% குறைந்தும், மக்களுக்கு விலைக்குறைப்பு வழங்கப்பட வில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்ப ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி’ என்ற கொள்கையை முன்வைக்கிறது பாஜக அரசு. இத்தகைய கொள்கைகளை எதிர்த்துப் போராடவே எங்கள் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

4-ஆவது நாளாக சரிவைக் கண்ட  பங்குச் சந்தைகள்!

இந்திய பங்குச் சந்தை வணிகம் 4-ஆவது நாளாக வியாழனன்றும் (அக். 24) சரிவுடன் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான செக்செக்ஸ்  16.82 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 36.10 புள்ளி களும் சரிந்தன. குறிப்பாக, நிப்டி அக்டோபர் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 5 சதவிகித சரிவைக் கண்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு ஒரே மாதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும்.

வணிக அழுத்தம் காரணமாகவே சீனாவுடன் சந்திப்பு?

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை புதன்கிழமை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடியின் இருதரப்பு சந்திப்பு, சீனா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு இந்திய வணிக நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்தின் மீது அதிகரித்த அழுத்தம் காரணமாகவே நடந்தது என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.  2020-ஆம் ஆண்டு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, இந்தியா, சீன வணிக நிறுவனங்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதித்தது,  பல சீன செயலிகளுக்கு தடை விதித்தது. விசா வழங்குவதை குறைத்தது.