court

img

வயதை தீர்மானிக்க ஆதார் முறையான ஆவணம் அல்ல - உச்சநீதிமன்றம்

ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 2015ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இறந்தவரின் இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்கும் போது மோட்டார் விபத்து உரிமை கோரும் தீர்ப்பாயம் ஆதார் அடிப்படையில் வயதை 45இல் இருந்து 47ஆக தவறாக கணக்கிட்டது. இதனால் பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் இறந்தவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகை ரூ.19.35 லட்சத்தில் இருந்து ரூ.9.22 லட்சமாக குறைந்தது. 
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. விசாரணையின் முடிவில், வயதை தீர்மானிக்க முறையான ஆவணமாக ஆதாரை ஏற்றுக்கொண்டு பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. பள்ளியில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழை (TC) பிறந்த தேதிக்கான சரியான ஆவணம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில், ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும், பிறந்த தேதிக்கான ஆவணமாக கருத முடியாது என்று கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்ததை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.