states

img

அரசியல் ஆதாயத்திற்காக புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா? மோடி அரசு மீது ராஜஸ்தான் முதல்வர் குற்றச்சாட்டு....

ஜெய்ப்பூர்:
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அரசியல் ஆதாயத்திற்காக புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதோ அங்கெல்லாம் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் உஷார்படுத்தப்படுகின்றன. அதன்படி, தற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு சிபிஐ சோதனை தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, இந்த புலனாய்வு அமைப்புகளை தமது அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்தி வருகிறது. ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டன.

ஒருகாலத்தில், சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் நம்பகத்தன்மையை பெற்றிருந்தன. தற்போது, ஒன்றிய அரசு சொல்லும் பணிகளை மட்டும் செய்வதால் அந்த அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை நொறுங்கி விட்டது. இது, அந்த அமைப்புகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். ஆனால், வேறு வழியில்லாமல் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்கிறேன். ஒரு காலம் வரும். அப்பொழுது, பாஜகவுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.