பிரதமர், நாடாளுமன்றத்தில் போராடும் விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக அவர்களை இழிவுபடுத்தும் விதத்திலும், மிரட்டும் விதத்திலும் பேசியிருப்பதை இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது.
இது தொடர்பாக, சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர், அரக்கத்தனமான வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திப் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை “அந்நிய அழிவு சித்தாந்தத்தால்” ஈர்க்கப்பட்ட “போராட்ட ஜீவிகள்” என்று கூறி மிரட்டியிருக்கிறார்.
போராடும் விவசாயிகளுக்கு நாள்தோறும் ஆதரவு பெருகிவருவதைக்கண்டு நிலைகுலைந்து, பிரதமர் இவ்வாறு போராட்டங்களேயே கேலிசெய்யும் நிலைக்கு இறங்கியிருக்கிறார். போராடுவது என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். அது, ஜனநாயக அமைப்பின் தூணாகும். பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய நம் சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பர்ய நடைமுறைகளுக்கு உண்மையாக இருந்து, விவசாயிகள் தங்கள் நிலத்தையும் தங்கள் வாழ்வாதாரங்களையும் பறித்திடக்கூடிய விதத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது இதன் மீது பிரதமருக்கு ஏற்பட்டிருக்கும் சகிப்புத்தன்மையற்ற கோபம் என்பது, அவர் சார்ந்துள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தத்திலிருந்து துளிர்த்த ஒன்றேயாகும். ஏனெனில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு, சுதந்திரப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் கிடையாது என்பது மட்டுமல்ல பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு முற்றிலும் சரணாகதி அடைந்திருந்தது. இன்றைய தினம் இவருடைய அரசாங்கமும் அந்நிய மற்றும் உள்நாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு சேவகம் செய்யும் விதத்தில் சரணடைந்திருக்கிறது.
இன்றையதினம், பிரதமர் “கார்ப்பரேட் ஜீவி” அரசாங்கத்திற்கு தலைமைதாங்கிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் பேராசைபிடித்த ஒட்டுண்ணி கார்ப்பரேட் வர்க்கத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்கிற ஒரேகுறிக்கோளுடன் அது நாட்டிற்கு உணவு உற்பத்தி செய்துதரும் விவசாயிகளையும், மக்களையும் எதிரிகளாகக் கருதுகிறது. இவ்வாறு ஒட்டுண்ணி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்து வருவதன் காரணமாகவே அவர் விவசாயிகளைப் பார்த்து, ‘ஒட்டுண்ணிகள்’ என்று கூறும் அளவிற்கு, மிகவும் வெட்கக்கேடான நிலைக்கு தாழ்ந்திருக்கிறார்.
விவசாயிகளை, ‘காலிஸ்தானிகள்’ என்றும், ‘தேச விரோதிகள்’ என்றும், ‘பயங்கரவாதிகள்’ என்றும் நிந்தனை செய்வதும், இந்தப் போராட்டம் ஒரேயொரு மாநிலத்தில் மட்டுமே நடைபெறுவதாகக் கூறி, மக்களைத் திசைதிருப்ப முயன்றதும் அனைத்தும் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்துவிட்டது. இப்போது விரக்தியுற்ற நிலையில் இவர்கள் மேற்கொண்டிருக்கிற முயற்சிகளும் தோல்வியுறுவது உறுதி.
ஜனநாயகத்தை மதிக்காத போக்கு, தங்களுக்கு எதிராகக் கருத்துவேறுபாடுகள் கொண்டிருப்போர் மற்றும் கிளர்ச்சி செய்பவர்கள் மீது சகிப்பின்மையுடன் நடந்துகொள்கிற ஆளும் பாஜக-வின் அனைத்து முயற்சிகளையும் சிஐடியு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. இத்தகைய எதேச்சாதிகார அணுகுமுறை உண்மையில் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பாசிஸ்ட் சித்தாந்தத்திலிருந்து துளிர்த்ததாகும். இத்தகைய நாசகர மற்றும் பேரழிவுதரும் சித்தாந்தத்தை நம் நாடு இதற்கு முன்னெப்போதும் பார்த்ததில்லை. நாட்டில் போராட்டங்களின் அலைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு, பாஜக அரசாங்கமே பொறுப்பாகும். விவசாயிகளின் போராட்டங்கள் மட்டுமல்ல, தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களில் பல பிரிவினர்களின் போராட்டங்களும் நாள்தோறும் அதிகரித்து வருவதற்கும் பாஜக அரசாங்கமே காரணமாகும்.
மத்திய அரசாங்கம், வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டங்களாக – முதலாளிகள் நலச் சட்டங்களாக மாற்றியிருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மக்களை இழிவுபடுத்தி, மிரட்டும் தொனியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சிஐடியு கோருகிறது. இல்லையேல் ‘போராடுவோர்’ அதிகரித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
இவ்வாறு தபன் சென் அறிக்கையில் தெரிவித்தள்ளார்.
(ந.நி.)