டிசம்பர் 8 - பாரத் பந்த்திற்கு, அகில இந்தியப் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (‘அய்ஃபக்டோ’) தன் முழு ஆதரவினைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அய்ஃபக்டோ சார்பில் அருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த பத்து நாட்களாக அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டுக்குழு விவசாயிகள் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. அவர்கள் கொடூரமான வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு, 2020ஐயும் ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூர்வமாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். இந்தச் சட்டங்களை நிறைவேற்றிட மத்திய அரசுக்கும், உலக நிதி மூலதனத்துடன் இணைந்துள்ள கார்ப்பரேட்டுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சதிகளை அவர்கள் மிகச்சரியாகவே சுட்டிக்காட்டி இருக்கின்றனர். இப்போது இவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 8 - பாரத் பந்த் அறிவித்திருக்கின்றனர்.
மத்திய அரசாங்கம் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, அனைத்து ஜனநாயக நடவடிக்கைகளையும் தடுத்துவிட்டு, தங்களுடைய பொருளாதார நிகழ்ச்சிநிரலை வெறித்தனமாக நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்பதை முறியடித்திட இது ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும். விவசாயிக் கிளர்ச்சிப் போராட்டம் வெற்றியடைவது என்பது, மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மீதான முதல் அடியாக அமைந்திடும்.
டிசம்பர் 8 பாரத் பந்த்தை முற்போக்கு, ஜனநாயக மற்றும் தேசப்பற்று சக்திகள் ஒன்றுபட்டு நின்று ஆதரித்து வெற்றிஅடையச் செய்திட வேண்டும் என்று அய்ஃபக்டோ கோருகிறது.
இவ்வாறு அய்ஃபக்டோ அறிக்கையில் கூறியுள்ளது.