இம்பால், ஜூலை 21 - மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. குக்கி பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து மணிப்பூர் பழங்குடியினர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மணிப்பூர் பழங்குடியினர் மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சின்கன்லுன் கெய்ட் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை, மோதல் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடியின் கருத்தை பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது அவர், இந்த குற்றச் சம்பவத்தை செய்த நபர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். நாட்டின் பிரதமராக அவர் கூறியுள்ள இந்த வார்த்தைகளுக்கு நிச்சயமாக பலன் இருக்கும் என்று நம்புகிறோம். ஆனால், இந்த விவகாரத்தில் மாநில அரசு பாரபட்சத்துடன் நடந்து கொண்டுள்ளது. தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கு மாநில அரசிடம் இருந்து நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை குக்கி - ஜோ மக்களுக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார். இதையே குக்கி சமூகத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் லாம்டின்சாங் ஹோக்கியும் குறிப்பிட்டுள்ளார். “பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதால், தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறியிருக்கும் லாம்டின்சாங் ஹோக்கி, “வன்முறையைக் கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங், தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதன் மூலமே மணிப்பூரில் அமைதி திரும்பும்” என்றும் கூறியுள்ளார். மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை, “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் வடிவமைப்பு செய்யப்பட்டது” என்று குற்றம் சாட்டியிருக்கும், ரைஜோர் தளம் கட்சித் தலைவரும், அசாம் சுயேட்சை எம்எல்ஏ-வுமான அகில் கோகோயும், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.