திருவனந்தபுரம்:
மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் (சி & ஏஜி) யின் தவறான நடைமுறைகளை ஏற்க முடியாதுஎன்று கூறி அந்த அறிக்கைக்கு எதிராக கேரள சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது.
விதி 118 இன் படி, சி &ஏஜி அறிக்கை தொடர்பான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் பேரவையில் முன்வைத்தார். தீர்மானத்தின் முழு விவரம்:சி & ஏஜி என்பது மத்திய,மாநில அரசுகளின் செலவு மற்றும் வருவாயைத் தணிக்கை செய்யும் ஒரு அரசமைப்பு நிறுவனம் ஆகும். இந்த தணிக்கை நடத்த விதிகள், ஒழுங்குமுறைகள், விதிகள் உள்ளன. நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளை நீங்கள் வேண்டுமென்றே மீறினால் என்ன ஆகும்?
சி & ஏஜி தணிக்கையின் போது, வரைவு அறிக்கை சம்பந்தப்பட்ட துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கோரப்படுகின்றன. இந்தக் கருத்துக்களை பரிசீலித்து, பின்னர் இறுதி அறிக்கை சி & ஏஜி,கையெழுத்துடன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இது பொது கணக்குக்குழுவின் பரிசீலனைக்குச் சென்று குழு தனது அறிக்கையைத் தயாரிக்கிறது.இங்கே, வரைவு அறிக்கையில் இல்லாத சிலபகுதிகள், இறுதி அறிக்கையில் திணிக்கப்பட்டுள்ளன. சுருக்கமாக கூறினால், சம்பந்தப்பட்ட துறைக்கு இயற்கை நீதி மறுக்கப்பட்டுள்ளது. முடிவெடுப்பதற்கு முன் பாதிக்கப்பட்ட நபர்/ நிறுவனத்தின் கருத்தைக் கேட்பது இயற்கை நீதியின் (Natural Justice) அடிப்படைதத்துவம். இது மீறப்பட்டதால், சி & ஏஜி அறிக்கையின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது.இந்த தவறான நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டால், நிர்வாகத்துக்கும் சட்டப்பேரவைக்கும் இடையிலான checks and balances தகர்த்துவிடும். அதற்கு உடந்தையாக இருந்ததாக இந்த பேரவைக்கு இழிவு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிறஉறுதி எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் இந்ததீர்மானம் என்று கூறப்பட்டிருந்தது.