கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான 360 டிகிரி வளர்சிதை மாற்ற மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான 360 டிகிரி வளர்சிதை மாற்ற மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், நீரிழிவு நோய் தொடர்புடைய பிரச்சனைகளை தடுக்கவும், நோயை கண்டறிந்து சிகிச்சையளிக்கவும், வளர்சிதை மாற்ற மையங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் நோய் கட்டுப்பாட்டு விகிதத்தை 16 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்த இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.