திருவனந்தபுரம்:
லட்சத்தீவு மக்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை அழிப்பதன் மூலம் மதவெறி நிகழ்ச்சி நிரல்களையும் பெருநிறுவன நலன்ன்களையும் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் பினராயி விஜயன் கேரள சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். விதி எண் 118 இன் கீழ் இதுகுறித்த தீர்மானத்தை முன்மொழிந்து சட்டப்பேரவையில் அவர் திங்களன்று (மே 31) உரையாற்றினார்.
அவரது உரையின் அம்சங்கள் வருமாறு:
லட்சத்தீவுகளில் தென்னை மரங்களில் காவி வண்ணம் பூசுவது என்பதில் தொடங்கி இப்போதுமக்களின் வாழ்விடங்கள், வாழ்க்கை மற்றும்இயற்கை உறவுகளை அழிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக தீவில் முன்பு கட்டப்பட்ட பதாகைகளை அகற்றவும், அதை எழுதியவர்களை கைது செய்யவும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கான மத்திய அரசின் நிர்வாகி நடவடிக்கை எடுத்தார்.லட்சத்தீவு மக்கள் பொதுவாக அமைதியாகவாழ்வதையும் விருந்தினர்களை அன்போடு உபசரிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். குற்றங்கள் நடக்காத லட்சத்தீவில் ஒரு குண்டர் சட்டத்தை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களை எதிர்பார்த்து இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன.
இதன் மூலம்எதேச்சதிகார ஆட்சி முறையை தொடரும் சூழல் உருவாக்கப்படுகிறது.லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான மீன்பிடித்தலை அழிக்கநடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கம். மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் வைக்கப் பட்டுள்ள கூடாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயற்கையான உணவின் முக்கிய அங்கமான மாட்டிறைச்சியை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பசு வதைக்கு தடை விதிக்கும் சங் பரிவார் நிகழ்ச்சி நிரல், பின்வாசல்வழியாக செயல்படுத்தப்படுகிறது. பசு வதையையும் மாட்டிறைச்சியையும் தடை செய்வதற்கும், பால் பண்ணைகளை மூடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை அங்குலம் அங்குலமாக அழிப்பதில் லட்சத்தீவில் உள்ள நிர்வாகி இப்போது தலைமை வகிக்கிறார்.
பஞ்சாயத்து அதிகாரங்கள் பறிப்பு
லட்சத்தீவில் தற்போதுள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒழிக்கவும் அதிகாரத்துவ ஆதிக்கத்தை சுமத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட பஞ்சாயத்து மற்றும் கிராம தீவு பஞ்சாயத்து அதிகாரங்கள் நிர்வாகிக்கு மாற்றப்பட்டுள்ளன. மீன்வளம், சுகாதாரம், கல்வி, கால்நடை பராமரிப்பு மற்றும் வேளாண்மை ஆகிய துறைகள் மாவட்ட பஞ்சாயத்தின் எல்லையிலிருந்து நீக்கப்படுகின்றன. இந்த துறைகளில் நேரடியாக தலையிட அதிகாரம் இல்லாத நிர்வாகிக்குஒரு உத்தரவின் மூலம் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், மத்திய அரசு தீவின் இயற்கையான ஜனநாயகத்தை தகர்க்கிறது.
தேர்தல் தொடர்பான விசித்திரமான பதிலும் முன் வைக்கப்படுகிறது. இரண்டு குழந்தை களுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற அணுகுமுறை நம் நாட்டில் இதுவரை கேள்விப்படாதது. அதையும்செயல்படுத்த தீவு நிர்வாகம் முயற்சிக்கிறது. இதன் விளைவாக, பெரும்பான்மையான தீவுவாசிகள் தங்கள் ஜனநாயக உரிமைகளை இழப்பார்கள். தீவு சமூகத்தின் வாழ்க்கை முறைகள், கலாச்சாரத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள சட்டம் தீவுக்கு வெளியேஉள்ள யாருக்கும் தீவில் நிலம் வாங்க உரிமைஇல்லை என்று கூறுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் சட்டம் இது. ஆனால் அதில் மாற்றங்களைச் செய்வதன் ஒரு பகுதியாக சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் நிலம் மற்றும் கட்டிடத்தின் உரிமையை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் ரூ.2 லட்சம் அபராதமும், ஒரு நாளைக்கு ரூ.20,000 கூடுதல் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தொலைதூர பகுதிகளில் பணிபுரிந்து கொண்டு அங்கு வசிப்பவர்களுக்கு, இந்த செயல்முறை அணுகமுடியாததாக மாற்றப்பட்டுள்ளது.
கேரளத்துடன் பின்னிப் பிணைந்தது
கேரளாவும் லட்சத்தீவும் பல நூற்றாண்டுகளாக பின்னிப் பிணைந்துள்ள மாநிலங்கள். பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பிற்கு முன்னர், பல தீவுகள் நிர்வாக ரீதியாக கண்ணூரின் அரக்கல் வம்சத்தின் கீழ் இருந்தன. 1956 நவம்பர் 1 வரை, லட்சத்தீவு அப்போதைய மலபார் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. லட்சத்தீவு கேரளாவுடன் நெருக்கமாக தொடர்புடைய ஒரு வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தை கொண்டுள்ளது. மலையாளமே அவர்களின் முக்கிய மொழி. தீவில் மலையாளம் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகள் உள்ளன. உயர் நீதிமன்றம் போன்ற அமைப்புகள் கொச்சியில் செயல்பட்டு வருகின்றன.
சரக்கு போக்குவரத்து கொச்சி மற்றும் பேப்பூர் துறைமுகங்கள் வழியாக நடைபெற்றுவருகின்றன. வரலாற்று ரீதியாக ஒன்றுக்கொன்றுசார்ந்த இந்த உறவை உடைக்க இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. லட்சத்தீவின் கலாச்சார ரீதியாக தனித்துவமான அம்சங்கள் மற்றும் அதன் தனித்துவமானவாழ்க்கை முறை மீதான அத்துமீறலை எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகின் பல பகுதிகளில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைவுக்கு உட்படுத்தும் முயற்சிகள் நடந்தாலும் அங்கெல்லாம் வலுவான எதிர்ப்புஎழுந்துள்ளது. இவ்வாறு தங்கள் சொந்த நாட்டில்ஆதரவற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவை பாடமாக இருக்க வேண்டும். இத்தகைய கொடூரமான செயல்கள் இந்தியாவில் நடக்கக்கூடாது.
லட்சத்தீவின் எதிர்காலம் கவலை அளிக்கிறது
நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான சக்திகளின் நலன்களுக்கு சாதகமாக நடத்தப்பட்டவையே அனைத்து பிரிவினைவாத இயக்கங்களும். அந்த வரலாற்று சூழலில் இருந்து பார்த்தால், லட்சத்தீவின் எதிர்காலம் கவலை அளிக்கிறது. இது இருளடைந்ததாகிவிடும் என்று ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனதில் கவலைகள் எழுந்துள்ளன. அந்த கவலையை கேரளம் பகிர்ந்து கொள்கிறது.காலனித்துவ ஆட்சியாளர்களின் செயல்களைக் கூட விஞ்சும் வகையில் நடக்கும் கலாச்சார அடையாளத்தின் மீதான தாக்குதல் இது. இது பன்மைத்துவத்தின் முகமாக இருக்கும் ஒரு ஜனநாயக கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியமான ஒன்று. எனவே, அரசியலமைப்பு விழுமியங்களை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் லட்சத்தீவு நிர்வாகியின் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் வலுவான கருத்து வேறுபாட்டை பதிவு செய்வது அவசியமாகும்.
காவிக் கும்பலின் ஆய்வகம்
இன்று லட்சத்தீவில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் காவிக் கும்பலின் நிகழ்ச்சி நிரலின் ஆய்வகமாக பார்க்கப்பட வேண்டும். மக்களின் கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறைமற்றும் உணவு ஆகியவற்றை காவிக்கும்பல் தனக்கு ஏற்ற வகையில் மாற்ற முயற்சிக்கிறது.மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதற்கும், கார்ப்பரேட்டுகளுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கார்ப்பரேட் நலன்களுக்கும் இந்துத்துவா அரசியலுக்கும் ஒரு பகுதி மக்களை அடிமைப்படுத்தும் இந்த முயற்சிக்கு எதிராக வலுவானஎதிர்ப்பு எழுப்பப்பட வேண்டும். அப்போது தான், தேசிய சுதந்திர இயக்கத்தால் முன் வைக்கப்பட்ட பன்முகத்தன்மையில் இந்திய தேசத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் பார்வையை பாதுகாத்திட முடியும்.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவு மற்றும் அதன் மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் மத்திய அரசுக்கு பொறுப்பு உள்ளது.அதற்கு சவால் விடுக்கும் நிர்வாகி அவரது பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். லட்சத்தீவு மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அழைப்பு விடுக்கிறேன்.இவ்வாறு தீர்மானத்தை முன்மொழிந்து, அதை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் பினராயி விஜயன் சபையை கேட்டுக்கொண்டார்.முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன், லட்சத்தீவில் நடப்பது ஒடுக்குமுறை நடவடிக்கைகள் என குற்றம் சாட்டினார். ஒத்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.