திருவனந்தபுரம்:
தடுப்பூசி ஒதுக்கீட்டில், மத்திய பாஜக அரசு காட்டும் பாரபட்சத்தால் கேரளத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் பல்வேறு தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசிடம் 50 லட்சம் அளவு (டோஸ்)தடுப்பூசி கோரியிருந்தார். ஆனால், 2 லட்சம் என்ற அளவிற்கே தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய தடுப்பூசி வழங்கல் நடைமுறைகளின்படி, இது ஒரு நாள் தேவைக்குக்கூட போதாது என்பதால், தடுப்பூசி விநியோகத்தை நாளொ ன்றுக்கு 3 லட்சமாக அதிகரிக்கும் கேரள அரசின் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளத்தில், சுமார் 2,000 மையங்களில் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், வியாழனன்று (ஏப்.15), 1282 அரசு நிறுவனங்கள் மற்றும் 384 தனியார் மையங்கள் உட்பட1666 மையங்களிலேயே தடுப்பூசி விநியோகிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஜிம்மி ஜார்ஜ் ஸ்டேடியத்தில் வெகுஜன தடுப்பூசி முகாம்கள் மருந்து இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது, திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், கோவிஷீல்ட் தடுப்பூசி முழுமையாக காலியாகி விட்டது.
இதனால், முதலாவது தவணை தடுப்பூசியை அளித்த பின்னரே இரண்டாவது அளவை மீண்டும் தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தடுப்பூசியை திறம்பட பயன்படுத்து வதில் கேரள அரசு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. தடுப்பூசியை வீணடிப்பது கேரளத்தில் பூஜ்யமாகவும், அதுவே மற்றபல மாநிலங்களில் முக்கியப் பிரச்சனையாகவும் உள்ளது. எனினும், மோடி அரசு, கேரளத்தை வஞ்சித்து வருகிறது.இதுவரை மாநிலத்தில் 47 லட்சத்து 27 ஆயிரத்து 565 பேர் தடுப்பூசியின் முதல் அளவையும் 5 லட்சத்து 53 ஆயிரத்து 611 பேர் இரண்டாவது அளவையும் பெற்றுள்ளனர்.