states

img

வி.முரளீதரன் மத்திய அமைச்சரான பிறகு தான் தூதரக பாதுகாப்புடன் தங்க கடத்தல் தொடங்கியது..... கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு.....

திருவனந்தபுரம்:
வி.முரளீதரன் மத்திய வெளிவிவகார அமைச்சராக ஆனபிறகுதான் தூதரக பாதுகாப்புடன் தங்க கடத்தல் தொடங்கியது என குற்றம்சாட்டிய கேரள முதல்வர்  பினராயி விஜயன், எவ்வளவு தங்கம் அவ்வாறு கடத்தப்பட்டது என்று எந்த மதிப்பீடும் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

சனியன்று அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: வி.முரளீதரன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு  பொறுப்பு வகிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு தூதரக பாதுகாப்புடன் தங்கக் கடத்தல் நடக்கத்  தொடங்கியது.  தூதரக பாதுகாப்புடன் தங்கக் கடத்தல் நடைபெறவில்லை என்று கூறுமாறு குற்றம் சாட்டப்பட்டவரை வற்புறுத்திய நபருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?.தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டதாக நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியபோதும், இந்த இணை அமைச்சர் ஏன் பலமுறை அதற்கு எதிரான கருத்தைக் கூறினார்? என்றும் முதல்வர் கேட்டார்.

மக்களின் நலனை பாதுகாத்து முன்னேறி வரும் இடதுசாரிகளை இழிவு படுத்துவதற்கு இது போதாது. அரசாங்கத்தின் மதிப்பைக் கெடுப்பதே இதன் நோக்கம். மக்களின் மனதில் இடதுசாரிகளின் நிலை மிகப் பெரியது. நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள்.  எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த மிரட்டல் மூலம் நடுங்க வைக்க முயற்சிக்காதீர்கள். அந்த எண்ணத்தை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதைத்தான் நேற்றும், இன்றும் நாளையும் சொல்ல முடியும்,”என்றார்.

பால்குடிக்கும் பூனையின் நினைப்பு
சுங்கத்துறை நடைமுறைகளை ஆரம்பத்தில் இருந்தே பார்த்தோம். முதல் குற்றச்சாட்டு என்னவென்றால், கடத்தல் தங்கம் பிடிபட்டபோது முதல்வர் அலுவலகத்திலிருந்து சுங்கத்துறைக்கு தொலைபேசி அழைப்பு  வந்ததாக கூறப்பட்டது. அது குறித்து அப்போதைய இணை சுங்க ஆணையாளரிடம் கேட்டபோது, முதல்வர் அலுவலகத்திலிருந்து யாரும் அழைக்கவில்லை என்று நேர்மையாகச் சொன்ன அந்த அதிகாரி எங்கே? அவர் நாக்பூருக்கு நாடு கடத்தப்பட்டார். வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, விசாரணையில் இருந்த பத்து பேரும் ஏன் ஒரே நேரத்தில் இடம் மாற்றப்பட்டனர்? உதவி ஆணையர் உடனடியாகஏன் மாற்றப்பட்டார்? அன்று அது விவாதிக்கப்பட வில்லை? இதில் சிலர் விளையாடுகிறார்கள். கண்களை மூடிக்கொண்டு பால் குடித்தால் யாருக்கும் தெரியாது என்று மனிதர்கள் நினைக்கக்கூடாது அது பூனைகளுக்குத்தான் பொருந்தும்  என்று முதல்வர் கூறினார்.