பெற்றோர் பிரிக்கப்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் தம்பதியர் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். கோழிக்கோட்டை சேர்ந்தவர் பாத்திமா நூரா. இருவரும் சவூதி அரேபியாவில் படித்தபோது சந்தித்துக்கொண்டனர். இருவருக்கும் இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் பட்டப்படிப்பு முடித்ததும் இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர். ஆனால் இதையறிந்த இருவரின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி தொண்டு நிறுவனம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பாத்திமாவின் உறவினர்கள் அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆதிலா கேரள உயர்நீதிமன்றத்தில் பாத்திமாவை அவளது உறவினர்கள் அடித்துத் துன்புறுத்தி கொண்டு சென்றுவிட்டதாகவும், அவளைக் காணவில்லை எனக்கூறி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வில், இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தடை இல்லை என அதிரடியாக உத்தரவிட்டார்.