கர்நாடகாவில் டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தில் பல் துலக்கிய பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான ஷர்வயா, கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. காலை தூக்க கலக்கத்தில் இருந்த ஷர்வயா, பல் துலக்குவற்காக பிரஷை எடுத்து பேஸ்டை வைத்து பல் துலக்க ஆரம்பித்துள்ளார். பல் துலக்க ஆரம்பித்ததும், டூத் பேஸ்ட் இல்லை என்பதை உணர்ந்து அது என்ன என்பதை பார்த்துள்ளார். அப்போதுதான் தான் தவறுதலாக டூத் பேஸ்ட்க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கியது தெரியவந்தது.
இதையடுத்து பேஸ்டை எடுத்து பல் துலக்கிவிட்டு இதுதொடர்பாக வீட்டில் சொன்னால் கேலி செய்வார்கள் என சொல்லாமலும் இருந்துள்ளார்.
அதனைதொடர்ந்து கடந்த பிப்.17 ஆம் தேதி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதையடுத்து தனது பெற்றோரிடம் எலி மருந்தில் பல் துலக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுகிழமை(பிப்.28) அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.