பெங்களூருவில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முகத்தில் குத்து வாங்கிய குத்துச்சண்டை வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஞான ஜோதி நகரில் உள்ள பாய் சர்வதேச வளாகத்தில் மாநில அளவிலான கிக் பாக்சிங் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன.
கர்நாடக மாநிலம் குத்துச்சண்டை சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் மைசூரை சேர்ந்த நிகில் என்ற 23 வயது வீரரும் மற்றொரு வீரரும் போட்டியிட்டனர். அப்போது நிகில் அந்த வீரரை காலால் தாக்க முயன்றபோது சுதாரித்த எதிர்வீரர் திரும்ப நிகிலின் முகத்தில் பலமான குத்து ஒன்றை விட்டுள்ளார்.
இதில் நிலைதடுமாறிய நிகில் அங்கேயே சுருண்டு மயங்கி விழுந்துள்ளார். நிகில் முகத்தில் குத்திய வீரர் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட கீழே விழுந்த நிகில், நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து நிகிலை போட்டி ஏற்பாட்டாளர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கோமாவில் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
ஜூலை 10 ஆம் தேதி நிகழ்ந்த போட்டியின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து, ஞான பாரதி காவல்துறை அதிகாரிகள், அலட்சியத்தின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக கிக் பாக்சிங் குத்துச்சண்டை போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாக கூறினர்.